நஸ்ரி அல்லது ஷாரீருடன் போட்டியிட விரும்பும் ஸைட் இப்ராகிம்

 

14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் டிஎபியின் ஸைட் இப்ராகிம் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் ஷரீர் அப்துல் சமாட் அல்லது பாடங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் ஆகிய இருவரில் ஒருவருடன் மட்டுமே போட்டியிட விரும்புகிறார்.

ஒரு பெர்சத்து அல்லது பிகேஆர் வேட்பாளராக போட்டியிட நேர்ந்தால் தாம் அந்த இருவரில் ஒருவருக்கு எதிராகப் போட்டியிட விரும்புகிறேன், ஏனென்றால் அவ்விருவரும் பிரதமர் நஜிப் ரசாக்கின் கண்மூடித்தனமாக விசுவாசிகளாக இருக்கின்றனர்.

இந்த விசுவாசம் அரசியல் நடப்புகள் சார்ந்ததாகும். இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் அது ஒரு “முழுநிறைவான சர்வாதிகாரத்தில்” முடிவுறும் என்று ஸைட் அவரது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இப்படிப்பட்ட சிலர் அம்னோவில் அனுதினமும் ஏதாவது ஒரு செய்தியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை பக்கத்தான் ஹரப்பான் எதிர்கொள்ளாவிட்டால் அவர்கள் தொடர்ந்து தெருக்களில் வலம்வந்து கொண்டிருப்பார்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு போட்டியிட இருக்கைகள் அளிக்கப்பட்டது என்றும், அவற்றில் அவருக்கு அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லாததால் அவற்றை நிராகரித்து விட்டதாகவும் ஸைட் மேலும் கூறினார்.

அவர் போட்டியிடுவது என்றால் அது நாட்டின் புதிய அரசியல் நிலவரத்தை எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும் – அதாவது அவர் டிஎபி சின்னத்தின் கீழ் நகர்புற, சீனர்கள் பெரும்பான்மையான இருக்கையில் போட்டியிடுவதாகும். அவ்வாறு செய்வது டிஎபி சீனர்கள் கட்சி என்ற எண்ணத்தை அகற்றும் என்றாரவர்.

தாம் ஒரு பாதுகாப்பான தொகுதியை எதிர்பார்ப்பதாகவும் எதிர்பாராத இழப்பை எதிர்கொள்ள தயாராக இல்லை என்ற கூற்றை நிராகரித்த ஸைட், தாம் பாதுகாப்பான அரசியலை விரும்பியிருந்தால், அமைச்சர் பதவியை விட்டு விலகியிருக்க மாட்டேன் என்றார்.

“நாட்டிற்கு சிறந்த எதிர்காலம் அமைய வேண்டும் என்பதே எனது ஈடுபாடு, ஒரு ஒய்பி (YB) ஆகிவிட வேண்டும் என்பதல்ல.”

அடுத்த வாரம் அவர் நாட்டின் தெற்குப் பகுதிக்குச் சென்று ஏன் “மாற்றம் தேவைப்படுகிறது” என்று மக்களிடம், குறிப்பாக மலாய்க்காரர்களிடம், விளக்கம் அளிக்கப் போவதாகக் கூறினார்.

சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் நீண்டகாலமாக அவர்களிடமிருந்து திருடிக் கொண்டிருக்கின்றனர் மற்றும்  அதை நிறுத்த வேண்டிய காலம் வந்து விட்டது என்று மக்களுக்கு தொடர்ந்து நினைவுறுத்திக் கொண்டிருப்பேன். தூது செல்பவராக இருப்பதற்கு நான் ஒரு வேட்பாளராக இருக்க வேண்டியதில்லை என்று ஸைட் இப்ராகிம் மேலும் கூறினார்.