மக்களிடையேயானப் பிரச்சினைகளைக் கையாள்வதில், பேராக் மாநிலத் தலைவராக இருக்கும், மந்திரி பெசார் ஷம்ரி அப்துல் காடிர்-இன் செயல்திறனை மதிப்பீடு செய்ய, ஒரு மக்கள் நடுவர் மன்றத்தை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அமைக்கவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, காலை மணி 9.30 முதல் மாலை 4 மணிக்குள் நடைபெறவுள்ள அந்த மக்கள் நடுவர் மன்றத்தில் பங்கேற்க, ஜாலான் கம்பாரில் இருக்கும் தோ போ கியோங் மண்டபத்திற்கு வருமாறு இன்று பேராக் மக்கள் நடுவர் மன்றக் குழு, ஷம்ரிக்கு அழைப்பு கொடுத்துள்ளது.
அந்த அழைப்பிதழை, பேராக் நடுவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமாரிடம் இருந்து, மாநிலச் செயலகத்தின் நிர்வாக அலுவலர் ஹனித்தா அலாங் இஸ்மாயில் மற்றும் சமூக அபிவிருத்தி, புகார் பிரிவு நிர்வாக அதிகாரி அசாட் சஃப்வான் மஸ்லான் இருவரும், மந்திரி பெசாரின் சார்பில் பெற்றுக்கொண்டனர்.
மாநிலத்தின் பி20 பிரிவினர் எதிர்நோக்கும் பெரும்பாலான நிலப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க, இந்த ‘மக்கள் நடுவர் மன்ற’த்தை அமைத்துள்ளதாக, பி.எஸ்.எம். மத்தியச் செயலவை உறுப்பினருமான டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
“நிலம் தொடர்பான பிரச்சனைகளில், மந்திரி பெசாருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், இந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நீண்ட காலமாக தீர்வு கொடுக்கப்படாமலேயே இருக்கிறது.
“சில நிலப் பிரச்சனைகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகின்றது,” என்று அவர் இன்று பேராக் மாநிலச் செயலகத்தில், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மந்திரி பெசார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆக மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் அவருக்கு உண்டு எனவும் சுங்கை சிப்புட் எம்.பி.-யுமான டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
“மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நாங்கள் பலமுறை மந்திரி பெசாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம், சில கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினோம், ஆனால் அவர் எங்களைச் சந்திக்க தயாராக இல்லை.
“எனவே, மக்கள் நடுவர் மன்றத்தை அமைப்பதுதான் அறிவார்ந்த அணுகுமுறை என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், மாநில அரசாங்கம் அவர்கள் தரப்பிலிருந்து தகவல்களைச் சேகரித்து, இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் இது உதவும்,” என அவர் மேலும் கூறினார்.
கம்போங் டிபிஐ (புந்தோங்), கம்போங் பேராக் ஹைட்ரோ, கம்போங் பெங்காலி (சுங்கை சிப்புட்) நகரமுன்னோடிகள் பிரச்சனை மற்றும் ஸ்ட்ராதிஸ்லா தோட்டம், கமிரி தோட்டம், கம்போங் பாலி (துரோனோ) விவசாயப் பிரச்சனை போன்ற வழக்குகள் இந்த மக்கள் நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்படும். அவற்றோடு, சுங்கை சிப்புட் மலிவு விலை வீட்டுப் பிரச்சனையும் இங்கு கொண்டுவரப்படும்.
முன்னாள் மலேசிய மனித உரிமைகள் ஆணையக் கமிஷனர் டெனிசன் ஜெயசூரியா மற்றும் முகமட் ஷானி, மலேசிய அறிவியல் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் ரொஹானா அரிஃபின், பினாங்கு நுகர்வோர் சங்கத்தின் பொதுநல வழக்கறிஞர் மீனாட்சி இராமன் மற்றும் பினாங்கு மாநகராட்சி மன்ற கவுன்சிலர் லிம் மா ஹுய் ஆகிய 5 தீர்ப்பாளர்களை இந்த மக்கள் நடுவர் மன்றம் கொண்டிருக்கும்.
இவர்கள் பிரச்சனைகள் பற்றிய விளக்கத்தைக் கேட்டறிவதோடு, அதற்குப் பதிலளிக்க மந்திரி பெசாருக்கு வாய்ப்பும் வழங்குவர்.
இறுதியில், நீதிபதிகள் மந்திரி பெசாரின் பதில்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவர்.
தேர்தல் வருமுன் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் மக்கள் மீது அலாதியான அன்பு வந்து ஆளுகின்றது.
இதுக்கு பேருதான் கூப்பிட்டு “வச்சு செய்யறதா” ?