அரசாங்க வீடுகள்(பிபிஆர்) குறைந்த எண்ணிக்கையில் கட்டப்பட்டுள்ள மாநிலம் பினாங்குதான் என்கிறார் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்தீப் சிங் டியோ.
கூட்டரசு அரசாங்கம் கட்டிய 102,000 வீடுகளில் பினாங்குக்குக் கிடைத்தது 999 வீடுகள் மட்டுமே.
இதன் தொடர்பில் முதலமைச்சர்(சிஎம்) லிம் குவான் எங்கும் தாமும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊராட்சி, வீடமைப்பு அமைச்சர் நோ ஒமாரைச் சந்தித்துப் பேசியதாக அவர் தெரிவித்தார்.
“பிபிஆர் வீடுகள் கட்டுவதற்காக ஜெலுத்தோங், கம்போங் கோட்டா கியாமில் மாநில அரசுக்குச் சொந்தமான 8.5 ஏக்கர் நிலத்தைக் கொடுப்பதாக சொன்னோம்.
“கடந்த ஏப்ரல் 20-இல், சிஎம் நோ ஒமாருக்கு ஒரு கடிதம் எழுதி அதில் (முன்பு குறிப்பிட்ட இடத்துக்கு) அருகிலேயே இண்டா வாட்டர் கொன்சோர்டியத்தின் 14.6 ஹெக்டார் நிலம் இருப்பதாகவும் அது பெரிய நிலம், நல்ல இடத்திலும் அமைந்துள்ளது என்பதால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார்”, என ஜக்தீப் தெரிவித்தார்.
அமைச்சு அந்த இடத்தை அக்டோபர் 9-இல் சென்று காணத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அதன் வருகை இரத்துச் செய்யப்பட்டது. அதற்கான காரணமும் கூறப்படவில்லை என்றார்.
ரிம2,500க்கும் குறைவாக வருமானம் பெறுவோருக்கு அரசாங்க வீடுகள் கட்டித்தரப்படும் என்று ஊராட்சி, வீடமைப்பு அமைச்சு அளித்துள்ள வாக்குறுதியை நினைவுபடுத்தி அமைச்சுக்குப் பல கடிதங்கள் எழுதப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.