நாட்டில் இதுவரை நடந்துள்ள தேர்தல்கலில் எதிர்வரும் 14வது பொதுத் தேர்தல்தான் போட்டிமிகுந்ததாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அதை ஒப்புக்கொண்டிருக்கிறார். “தேர்தல்களுக்கெல்லாம் தாய்” என வருணித்த அவர், புத்ரா ஜெயாவில் பிஎன் தொடர்ந்து இருக்குமா என்பதை முடிவு செய்யப்போகும் தேர்தல் இது என்றும் கூறினார்.
இத்தேர்தலில் மீண்டும் “சீனர்களின் சுனாமி” இருக்குமா அல்லது சீனர்கள் பிஎன்னுக்கு, குறிப்பாக மசீசவுக்கும் கெராக்கானுக்கும் ஆதரவு கொடுக்கப் போகிறார்களா என்பது ஒரு கேள்வி.
இக்கேள்வியை மசீச தலைவர் லியோ தியோங் லாயிடம் கேட்டதற்கு, சீனர் சமூகம் “கண்ணாடிக் கல் வைரம்” இரண்டுக்குமுள்ள வேறுபாட்டைத் தெரிந்து வைத்துள்ளது என்றார்.
“கடந்த பொதுத் தேர்தலில் நல்ல பாடம் கற்றுக் கொண்டோம். பலவீனங்களையும் தெரிந்து கொண்டோம். கடந்த தேர்தலில் சீனர்களின் ஆதரவை இழந்ததற்கு மசீசவில் இருந்த பிரச்னைகளும் ஒரு காரணம்.
“அதனால்தான் 2013 இறுதியில் நான் கட்சிக்குத் தலைமையேற்றதும் முதல் வேலையாக கட்சியை உருமாற்றினேன். மக்களின், குறிப்பாக சீன வாக்காளர்களின் ஆதரவைப் பெற இந்த உருமாற்றம் அவசியம்”, என்று லியோ அண்மயில் பெர்னாமாவிடம் கூறினார்.
உருமாற்றத்தின் விளைவாக மசீச உறுப்பினர்கள் முன்னர் இருந்ததைவிட இப்போது அதிக ஒற்றுமையுடன் இருக்கிறார்கள், கட்சியில் முகாம்கள் இல்லை அணிகள் இல்லை. இதனால் மசீசமீது சீனர் சமூகத்துக்கு மீண்டும் நம்பிக்கை வந்துள்ளது என்றாரவர்.
மசீச கெராக்கானுடன் கொண்டுள்ள அணுக்கமான உறவுகளும் பிஎன்னுக்குச் சீனர் சமூகத்தின் ஆதரவை நிலைநிறுத்த உதவியுள்ளது.
“ஜிஇ 14-இல் சீனர் சுனாமி ஏற்படும் அளவுக்குப் பெரிய பிரச்னைகள் இல்லை என்றே நினைக்கிறேன். அரசாங்கச் சேவையில் வெளிப்படைத்தன்மை இல்லை, ஊழல் போன்ற விவகாரங்களுக்கெல்லாம் கட்டம் கட்டமாக தீர்வு காணப்பட்டு வருகின்றது.
“நாட்டை நிர்வகிக்க எந்தக் கட்சியைத் தேர்ந்தெடுப்பது என்பதை மக்களும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்”, என்றாரவர்.