சிலாங்கூர் வணிகர்கள் சிலர் தங்களுக்கு வந்த தண்ணீர் கட்டண பில்லைப் பார்த்துக் கொதிப்படைந்துள்ளனர். முந்திய மாதத்துடன் ஒப்பிடும்போது சிலருடைய தண்ணீர் கட்டணம் 50 மடங்கு உயர்ந்திருந்தது.
சிலாங்கூரில் நீர் விநியோகம் செய்யும் ஆயர் சிலாங்கூர் இதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கெப்போங்கில் கடந்த 14 மாதங்களான கார் கழுவும் தொழில் செய்துவரும் ஜான் யாப், டிசம்பர் 2017- ஜனவரி 2018 பில்லைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ரிம6,820 என்று அது காட்டியது. முந்திய மாதம் அவரது தண்ணீர் கட்டணம் ரிம138 மட்டுமே.
அவர் ஆயர் சிலாங்கூரின் கோம்பாக் மாவட்ட அலுவலகம் சென்று விசாரித்தார். அவரிடம் புகாரை விசாரிக்குவரை கட்டணத்தைச் செலுத்த வேண்டாம் என்று ஆலோசனை கூறப்பட்டது.
“அவர்கள் அதுவரை நீர் விநியோகத்தைத் துண்டிக்காமல் இருக்க வேண்டுமே”, என்றவர் வேண்டிக் கொண்டார். ஜான் இன்று செகாம்புட் எம்பி லிம் லிப் எங் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் கூட்டமொன்றில் கலந்து கொண்டார்.
ரொட்டி தயாரிக்கும் வெதுப்பகம் (பேக்கரி) வைத்துள்ள கேரின் வோங்கும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவருக்கு வந்த தண்ணீர் பில் ரிம8,236. முந்திய மாத பில்லைக் காண்பித்தார். அது ரிம433.32 தான். கட்டணத்தை அவர் இன்னும் கட்டவில்லை. கட்டாததால் நீரளிப்பு நிறுத்தப்படுமோ என்று பயந்து கொண்டிருக்கிறார்.
“கட்டணம் உயர்ந்தது ஏனென்று ஆயர் சிலாங்கூர்தான் விளக்கமளிக்க வேண்டும்… கட்டாததால் நீர் விநியோகம் துண்டிக்கப்படுமோ என்று பயமாக உள்ளது. இதற்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்”, என்று வோங் கூறினார்.
கட்டணத்தைக் கணக்கிடுவதில் தவறு நிகழ்ந்திருந்தால் அதை விளக்கி ஆயர் சிலாங்கூர் அறிக்கை வெளியிட வேண்டும் என லிம் கேட்டுக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட மற்றவர்களும் சும்மா இருக்காமல் முன்வந்து புகார் செய்ய வேண்டும் என்று அந்த டிஎபி எம்பி அறிவுறுத்தினார்.