மலேசியத் தேர்தல் ஆணையம் தேர்தல் தொகுதிகளுக்குப் பரிந்துரைத்துள்ள தொகுதி சீர்திருத்தங்கள் மீது பொது மக்கள் எழுப்பியுள்ள சட்டபூர்வமான ஆட்சேபங்களைச் செவிமடுக்க மறுப்பதன் இரகசியம் என்ன? தேர்தல் ஆணையம் அதனை அரசாங்கத்தின் ரப்பர் முத்திரையாகக் கருதுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
22,000 வாக்காளர்களின் ஆட்சேபனைகளுக்கு பதில் எங்கே?
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பல தொகுதிகளில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட அனைத்து ஆட்சேபங்களையும் செவிமடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. அப்படியே அது ஒதுக்கித்தள்ளிய ஆட்சேபணைகள் இருந்தால் அது குறித்துக் கடிதம் வாயிலாகச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஆனால் நேற்றுவரை 22 ஆயிரம் வாக்காளர்களின் ஆட்சேபணைகள் குறித்த எந்தத் தகவலும் சொல்லாமலிருப்பது கண்டிக்கத்தக்கது. வாக்காளர்களின் உரிமையை ஊதாசீனப் படுத்துவது ஆகும் என்கிறார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
மக்களின் ஜனநாயக உரிமைகளைக் கீழறுக்கும் இது போன்ற செயல்கள் மீது நாம் வெறுமனே இருக்க முடியாது. எல்லா ஆட்சேபங்களையும் செவிமடுக்கத் தேர்தல் ஆணையம் தவறினால் தாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என்று சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயக்குனருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.
இது குறித்து மேலும் விளக்கமளிக்கையில் தேர்தல் ஆணையத்தின் இரண்டாவது முறை பொது ஆட்சேப செவிமடுப்புக்கு சிலாங்கூரின் தேர்தல் தொகுதிகளிலிருந்து 250 ஆட்சேபங்களைப் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெர்சே சமர்ப்பித்திருந்தது. ஒவ்வொரு ஆட்சேபமும் குறைந்தது 100 வாக்காளர்களின் கையொப்பத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பது விதி முறையாகும்.
ஷா அலாம் குவாலிட்டி விடுதியில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தச் செவிமடுப்புக்கு சில தொகுதிகளிலிருந்து 40 ஆட்சேபங்களை மட்டுமே செவிமடுக்க அழைப்பு விடுக்கப்பட்டது. .அவை அம்பாங், பாண்டான், கோம்பாக், கோலச் சிலாங்கூர், கோல லங்காட் மற்றும் செர்டாங் ஆகிய தொகுதிகளைச் சார்ந்தவைகள். சிலாங்கூரின் மற்றத் தொகுதிகள் சமர்ப்பித்த மீதம் உள்ள 210 ஆட்சேபங்களின் நிலை என்ன? இவை அனைத்தையும் தேர்தல் ஆணையம் எப்போது செவிமடுக்கும் என்று கேட்டார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
நாடகமா?
முழு அளவில் ஆட்சேபணைகளை செவிமடுக்காத தேர்தல் ஆணையம், அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் 13 வது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த தேர்தல் தொகுதிகளுக்கான சீர்திருத்தங்களைச் சமர்ப்பிக்க வசதியாக, ஒப்புக்கு இந்த இரண்டாவது ஆட்சேபணை செவிமடுப்பு நடத்தியுள்ளதாகத் தெரிவதாக கெஅடிலான் சிலாங்கூர் தேர்தல் பாதுகாப்பு மற்றும் சட்ட நடவடிக்கை இயக்குனர் சங்கீதா ஜெயகுமார் குறிப்பிட்டார்.
தேர்தல் கமிஷன் அரசாங்கத்தின் ரப்பர் முத்திரை என்பதை தாங்கள் அறியாததா? இந்நாட்டு மக்களோ தேர்தல் கமிசனின் ரப்பர் முத்திரை ஆச்சே சார்,. இல்லாவிட்டால் இந்த நாட்டு மக்கள் பணத்தை திருடி வாங்கப்பட்ட உல்லாச படகில் உலக வலம் வரும் திருடனை அண்டை நாட்டு போலீசார் கைது செய்யும் போது, இந்நாட்டு மக்கள் தன் தலையில் விழும் இடியைக்கூட உணராமலிருப்பார்களா?