கோடீஸ்வரர் மீதான சர்ச்சை: அமைச்சரவை கூட்டத்தில் பொறி பறந்தது

நேற்றைய  அமைச்சரவைக்  கூட்டத்தில்    அம்னோ   அமைச்சர்   நஸ்ரி   அப்துல்  அசீசுக்கும்   மசீச,  கெராக்கான்   அமைச்சர்களுக்குமிடையிலான   சர்ச்சை    அனல்  பறக்கும்  விவாதமாக   மாறியதாக   சீனமொழி   நாளேடுகள்  செய்தி   வெளியிட்டுள்ளன.

ஹாங்காங்கில்   உள்ள  மலேசிய   கோடீஸ்வரர்  ரோபர்ட்  குவாக்  டிஏபிக்குப்  பண  உதவி   செய்வதாகக்  கூறப்பட்டதை    அடுத்து   அவர்மீது   தொடுக்கப்பட்ட  சரமாரியான   தாக்குதல்தான்    சர்ச்சைக்குக்  காரணம்.

மசீசவின்  மூன்று  அமைச்சர்களும்-   கட்சித்    தலைவர்   லியோ   தியோங்  லாய்,   துணைத்   தலைவர்    வீ  கா  சியோங்,  தலைமைச்   செயலாளர்   ஒங்  கா  சுவான்  ஆகியோரும்-  கெராக்கான்   அமைச்சர்   மா  சியு   கியோங்கும்  பொதுத்  தேர்தலில்  போட்டியிடும்   துணிச்சல்    குவாக்குக்கு  உண்டா  என்று   சவால்  விடுத்ததுடன்    அந்த  94-வயது   கோடீஸ்வரரைத்  தரக்குறைவாக   பேசியதற்கும்   நஸ்ரிமீது  கடும்   அதிருப்தி   தெரிவித்துக்  கொண்டனர்.

அதனால்  சர்ச்சை  மூண்டது.  இரு   தரப்பினரும்   பேச்சை  நிறுத்தத்  தயாராக  இல்லை,  இறுதியில்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்    தலையிட்டு   அவர்களை   அமைதிப்படுத்தினார்.

இதனிடையே    நடந்ததற்கு   நஸ்ரி    மன்னிப்பு  கேட்க   வேண்டும்   என்று  மசீச   அமைச்சர்கள்  கோரிக்கை  விடுத்ததாக    வீ-யை   மேற்கோள்    காட்டி   நன்யாங்   சியாங்  பாவ்,     கூறியிருந்தது.

கூட்டம்  இறுக்கமான  சூழலில்    நடந்ததாக   தெரிவித்த   வீ,  டிஏபிக்கும்   மலேசிய  இன்சைட்   வலைத்தளத்துக்கும்  பண  உதவி   செய்ததில்லை   என்று  குவாக்   மறுத்திருப்பதால்  இனி  யாரும்  அவரைக்  குறைகூறிப்  பேசக்கூடாது   என்று   அமைச்சரவை   பணித்திருப்பதாகவும்   கூறினார்.