முகைதின்: அம்னோ கட்சித் தேர்தலை ஒத்திவைத்தது செல்லாது

அம்னோ   கட்சித்  தேர்தல்களை  மீண்டும்  ஒத்தி வைத்திருப்பது   அதன்   அமைப்பு  விதிகளுக்கு    எதிரான  செயல்    என  பெர்சத்து    தலைவர்   முகைதின்  யாசின்  இன்று   கூறினார்.

முன்னாள்   அம்னோ   துணைத்    தலைவரான   முகைதின்   ஆகக்  கடைசியான   ஒத்திவைப்பு  அம்னோ   அமைப்புவிதியின்   10.16  விதிக்கு முரணானது    என்றார்.

அமைப்புவிதி  10.16  அம்னோ  உச்சமன்றத்துக்கு  கட்சித்   தேர்தலை  ஒத்திவைக்கும்   உரிமை   உண்டு   ஆனால்,  ஒத்திவைப்பு   தேர்தல்   நடக்கவிருந்த   நாளிலிருந்து   18மாதங்களைத்    தாண்டக்  கூடாது  என்கிறது.

சங்கப்  பதிவகம்   ஆகக்  கடைசி   ஒத்திவைப்புக்கு   ஒப்புதல்    அளித்திருப்பதாக  அம்னோ    தலைமைச்    செயலாளர்   தெங்கு    அட்னான்  தெங்கு     மன்சூர்   கூறிய  போதிலும்  அந்த  ஒப்புதல்   சட்டப்பூர்வமானதுதானா    என்று   முகைதின்   வினவினார்,

“ஒத்திவைப்பை    ஆர்ஓஎஸ்    அனுமதித்ததாக    தெங்கு   அட்னான்  சொல்வது  உண்மையா? இந்த  ஒத்திவைப்பு   சட்டத்துக்கும்  அம்னோ  அமைப்புவிதிகளுக்கும்   எதிரானது    அல்லவா?   இதற்கு  ஆர்ஓஎஸ்தான்  பதிலளிக்க  வேண்டும்”,  முகைதின்   இன்று   பெட்டாலிங்   ஜெயாவில்   பெர்சத்து   தலைமையகத்தில்   கூறினார்.

அம்னோ  2015-இல்,  2016  அக்டோபருக்குள்   நடைபெற  வேண்டிய     கட்சித்   தேர்தல்களை  18  மாதங்களுக்கு   ஒத்திவைத்தது.

அதன்படி  கட்சித்   தேர்தல்கள்  இவ்வாண்டு   ஏப்ரல்  19-க்குள்  நடத்தப்பட  வேண்டும்.

ஆனால்,  செவ்வாய்க்கிழமை   தெங்கு   அட்னான்   அம்னோ    அதன்  தேர்தல்களை  மேலும்  ஓராண்டுக்குத்   தள்ளிப்போடுவதாகக்  கூறினார்,