லியோ : பி.என்.-னில் சிலர் மசீச-வைச் சாகடிக்க நினைக்கின்றனர்

பி.என்.-னில் சில தரப்பினர் மலேசியச் சீனர் சங்கத்தை அழிக்க, வெளி சக்திகளுடன் சதிசெய்து வருவதாக மசீச தேசியத் தலைவர், லியோ தியோங் லாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“வெளியேயும் உள்ளேயும் மசீச-வை எதிர்க்க ஒத்துழைப்பு நடந்துவருவதை நம்மால் காணமுடிகிறது,” என்று அவர் கூறியதாக ‘ஓரியண்டல் டெய்லி’ செய்தி வெளியிட்டுள்ளது.

எந்தவொரு பெயரையும் அவர் குறிப்பிடவில்லை என்றாலும், அண்மையில் சில மசீச தலைவர்கள், சுற்றுலா, கலாச்சார அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் மற்றும் பினாங்கு முதல் அமைச்சர் லிம் குவான் எங் உடனான நெருங்கிய உறவை இலக்காக கொண்டு பேசியுள்ளனர்.

கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் மீது அவதூறு பேசிய நஸ்ரியை அல்லாமல், மசீச-வைச் சாடிய லிம் மற்றும் பினாங்கு கடலடி சுரங்கப் பாதை மீதான பிரச்சனையில் வாயைத் திறக்காமல் இருக்கும் அம்னோ அமைச்சர்கள் போன்ற சம்பவங்கள் பற்றி மசீச தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

அதோடுமட்டுமின்றி, மலேசியச் சீனர்களை மசீச பிரதிநிதிக்கவில்லை எனும் நஸ்ரியின் கூற்றையும் லியோ மறுத்தார்.

“மசீச இன்னும் சீனர்களைப் பிரதிநிதிக்கிறது என்ற உண்மையை நஸ்ரியால் மறுக்க முடியாது.

“பி.என்.-னின் உத்வேகத்தை அவர் அறிய வேண்டும். பிடிக்கிறதோ, இல்லையோ, மசீச இன்னும் ஒரு சீனர் கட்சிதான். அதுபோலதான், அம்னோ மலாய்க்காரர்களைப் பிரதிநிதிக்கவில்லை என்று நீங்கள் சொல்ல முடியாது,” என்றார் அவர்.

2008 உடன் ஒப்பிடும்போது, தற்போது குறைந்த எண்ணிக்கையிலான இடங்களையேக் கொண்டிருந்தாலும், அது மசீச-வின் நிலைபாட்டை வீழ்த்தவில்லை என்று லியோ கூறினார்.

மசீச என்றுமே சீனர்களின் உரிமையைப் பாதுகாக்க, தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது என்று லியோ சொன்னார்.

மேலும், மலேசியாவில் உள்ள சீன சமூகத்தின் கல்வி மற்றும் கலாச்சார நலன்களில் அக்கறை கொண்ட ஒரே கட்சி மசீச ஆகும் என்றும் அவர் சொன்னார்.

சீன சமூகத்தில் மரியாதைக்குரிய நபராக இருக்கும் குவோக் மீது அவதூறு பேசி, நஸ்ரி இழுக்கை ஏற்படுத்திக்கொண்டார் என மசீச குற்றம் சாட்டியது.