கிளாந்தான் மாநிலச் சட்டமன்ற நாற்காலிகளுக்கான பக்காத்தான் ஹராப்பானின் பேச்சு வார்த்தைகள் ஏறத்தாழ முடிவடைந்த நிலையில், டிஏபி-க்கு எந்தவொரு தொகுதியும் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
1986-ஆம் ஆண்டுக்குப் பின்னர், மீண்டும் அம்மாநிலத்தில் போட்டியிட வேண்டும் எனும் டிஏபி-யின் விருப்பத்திற்கு அது மாற்றாக உள்ளது.
கிளாந்தான் ஹராப்பானின் கூற்றுப்படி, இன்னும் மூன்று அல்லது நான்கு இடங்கள் மட்டுமே முடிவு செய்யப்படாமல் இருக்கும் வேளையில், டிஏபியின் பெயர் அந்தப் பட்டியலில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
“இறுதி பேச்சுவார்த்தைகளின் படி, அமானாவிற்கு 23 நாற்காலிகள், பிகேஆர் 10 நாற்காலிகள், பெர்சத்துவிற்கு 12 நாற்காலிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
“ஆக, இந்த எண்ணிக்கை கிளாந்தானின் 45 சட்டமன்றங்களை உள்ளடக்கிவிட்டதால், டிஏபிக்கு அங்கு இடமில்லை என்று தெரிகிறது,” எனப் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் மலேசியாகினியிடம் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பரில், டிஏபி-யைப் பிரதிநிதிக்கும் கிளாந்தான் ஹராப்பான் துணைத் தலைவர் சுவா சின் ஹுய், தங்கள் கட்சிக்குக் காலாஸ் மற்றும் கோத்தா லாமா சட்டமன்றத்தில் போட்டியிட ஆர்வம் இருப்பதாகக் கூறினார்.
கோத்தா லாமா, சீனர்கள் அதிகம் வசிக்கும் இடமாகும், மேலும் அத்தொகுதியில் கடந்த 12-வது மற்றும் 13-வது பொதுத் தேர்தலில் மசீச போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கும் காலாஸ் சட்டமன்றத்தில் ஒரு பூர்வக்குடியை வேட்பாளராக நிறுத்த டிஏபி எண்ணங்கொண்டுள்ளது.
இதுவரையிலான முடிவு, கிளாந்தான் ஹராப்பானின் பேச்சுவார்த்தைகளின் வழி செய்யப்பட்டது, ஆனால் ஹராப்பானின் மத்தியத் தலைமைத்துவம் டிஏபிக்கு இடம் கொடுக்கும் வாய்ப்பும் உள்ளது என நம்பப்படுகிறது.