கிட் சியாங் கழிப்பறையில் தவறிவிழுந்தார், வார இறுதி நிகழ்ச்சிகள் இரத்து

நேற்றிரவு, நாடாளுமன்ற டிஏபி தலைவர், லிம் கிட் சியாங், அவரின் ஜொகூர், கேலாங் பாத்தா இல்லக் கழிப்பறையில் தவறிவிழுந்து, நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவர் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியதால், இவ்வார இறுதி நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக, டிஏபி தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

“லிம் கிட் சியாங், இவ்வார இறுதி நிகழ்ச்சிகள் அனைத்தையும் இரத்து செய்கிறார். இன்று காலை, அவர் கேலாங் பாத்தாவில் ஒரு காப்பிக் கடையில் மக்களைச் சந்திப்பதாக இருந்தது, அந்தச் சந்திப்பும், நாளை காலை, சனிக்கிழமை பெக்கான் நானாஸ்-சில் நடக்கவிருந்த மக்கள் சந்திப்பும் இரத்து செய்யப்படுகின்றன.

“எதிர்வரும் சனிக்கிழமை மாலை, கோலாலம்பூரில், MH380 நான்காவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டார்,” என்று அந்த அறிக்கை கூறியது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை சுங்கை பெலெக் மற்றும் சிப்பாங்-கிற்கான லிம்மின் பயணத்திற்கு, வேறொரு புதிய தேதி உறுதி செய்யப்படும், ஞாயிற்றுக்கிழமை இரவு செத்தியா ஆலாமில் பிகேஆர் நிதி திரட்டு இரவு விருந்திலும் கிட் சியாங் கலந்துகொள்ள முடியாது என அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.