2018, மார்ச் 1 தொடக்கம், 1மலேசியா பயிற்சித் திட்ட அலவன்ஸ் (எஸ்.எல்.1எம்) ரிம 1,500-ல் இருந்து ரிம 2,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தலைநகரில் உள்ள பயிற்சியாளர்களின் சுமையைக் குறைப்பதே இதன் நோக்கம் என எஸ்.எல்.1எம்-ன் தலைமைச் செயலளார் நோரஷிகின் இஸ்மாயில் கூறினார்.
“தலைநகரில், வாழ்க்கை செலவுகள் மிகவும் அதிகமாக உள்ளது, ஆக இந்த அலவன்ஸ் அதிகரிப்பு, அவர்களின் பணிகளைச் சிறப்பாக செய்ய, ஒர் ஊக்குவிப்பாக இருக்கும்,” என்று அவர் நேற்று தலைநகரில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.
கடந்த வாரம், பிரதமர் நஜிப் ரசாக், செர்டாங் மலேசியா விவசாய எக்ஸ்போ பார்க்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், அவரின் உரையின் போது இந்த அலவன்ஸ் அதிகரிப்பை அறிவித்தார்.
இதுவரையில், 400 நிறுவனங்கள் எஸ்.எல்.1எம்-உடன் இணைந்து, டிசம்பர் 2017 வரையில், 144,400 பட்டதாரிகளுக்கு நேரடி மற்றும் மறைமுக தொடர்புகள் மூலம் உதவிகள் செய்யப்பட்டுள்ளன.
கூடுதலாக, மார்ச் 17 முதல் 18 வரை, கோத்தா கினாபாலுவில் மலேசிய சபா பல்கலைக்கழகத்தில், சபா மாநில நிலையில் நேர்முகத் தேர்வு நடத்தி, உள்ளூர் பட்டதாரிகளுக்கு 10,000 வேலைகளை வழங்க, எஸ்.எல்.1எம் இலக்கு வைத்துள்ளது.