ஆஸ்திரேலியாவில் இருக்கும் பணம் சட்டபூர்வமானது, புக்கிட் அமான் இயக்குனர் நிரூபித்தார்

புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வு துறை இயக்குநர் அஹ்மட் நஜ்முட்டின், தனது ஆஸ்திரேலிய வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் சட்டப்பூர்வமானது என்பதை நிரூபித்துவிட்டார் என, தலைமை போலிஸ் அதிகாரி முகமட் ஃபூஷி ஹருன் கூறினார்.

சிலாங்கூர், ஷா ஆலாமில் அவரது இல்லத்தை, அப்போதைய சந்தை விலையில் விற்றதன் மூலம் கிடைத்த ரிம 700,000 (A$260,770) பணம் அது, முறையான ஆவணங்களின் வழி நஜ்முட்டின் அதனை நிரூபித்துள்ளார் என அவர் சொன்னார்.

“அந்தப் பணம் தொடர்பான, முறையான அனைத்து ஆவணங்களையும் அவர் வழங்கியுள்ளார்.

“அப்பணத்தை வெளிநாட்டு வங்கி கணக்கில் வைக்க வேண்டியதன் தேவையையும் அவர் நியாயப்படுத்தினார், அது அவரின் பிள்ளையின் படிப்புக்கானது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனவே, அந்தப் பணம் சந்தேகத்திற்குரியது, அவர் எதோ குற்றச்செயலின் வழி அப்பணத்தைச் சம்பாதித்து உள்ளார் எனும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை எனவும் ஃபூஷி தெரிவித்தார்.

வான் அஹமட்டின் வங்கிக் கணக்கில் போடப்பட்ட பணம் சலவை செய்யப்பட்டது அல்லது குற்றச்செயல்கள் வழி கிடைத்த வருமானம் ஆகும் என்று ஆஸ்திரேலியன் பெடரல் போலீஸ் கூறியுள்ளதாக, சிட்னி மோர்னிங் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.