மகாதீர் : பிபிஎஸ்எம்ஐ செயல்பாட்டை, வாக்கெடுப்பின் வழி தீர்மானிப்போம்

14-வது பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதப் பாட கற்றல், கற்பித்தல் (பிபிஎஸ்எம்ஐ) கொள்கையை மறுபரிசீலனை செய்வதற்கு ஒரு வாக்கெடுப்பு நடத்தும்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், மக்கள் கருத்துக்களின் அடிப்படையில் முடிவு செய்யும் என்று ஹராப்பான் தலைவரான டாக்டர் மகாதீர் கூறினார்.

“பிபிஎஸ்எம்ஐ பிரச்சனையில் நாங்கள் பொதுமக்கள் கருத்தைக் கேட்போம், அத்திட்டம் அகற்றப்பட்டுவிட்டது, ஆனால் அதற்கான கோரிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. ஆங்கில மொழியைப் பயன்படுத்தும் பள்ளிகள் உள்ளன, சில பள்ளிகள் மலாய் மொழியைப் பயன்படுத்துகின்றன.

“அரசாங்கத்தை அமைத்தவுடன், நாங்கள் ஒரு கருத்துக் கணிப்பு நடத்துவோம். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, ஆங்கிலம் அல்லது மலாய் மொழியைப் பயன்படுத்த நாம் முடிவு செய்வோம்,” என்று இன்று கோலாலம்பூரில், செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

ஹராப்பானின் பிரதமர் வேட்பாளரான மகாதிர், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, மக்கள் ஆதரவு கிடைத்தால், அக்கூட்டணி அரசாங்கம் பிபிஎஸ்எம்ஐ-யை மீண்டும் அமல்படுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யும் என்று கூறினார்.

2003-ல், மகாதீரால் அத்திட்டம் கொண்டுவரப்பட்டது. அத்திட்டத்தை எதிர்த்து, 2009-ல் நாட்டின் எதிர்க்கட்சிகள், அரசு சாரா அமைப்புகள் என பலதரப்பினர் தெரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து, அப்போதையக் கல்வி அமைச்சரான முஹிடின் யாசின் 2012-ல், அத்திட்டத்தை அகற்றினார்.

முன்னதாக, பிபிஎஸ்எம்ஐ-யை அப்போதைய பக்காத்தான் ராக்யாட் எதிர்த்தது பற்றி கேட்டபோது, அப்போது அதுகுறித்த விவாதத்தை எதிர்க்கட்சியினருடன் நடத்தியது இல்லை என்றார் மகாதீர்.

“அந்த நேரத்தில் நான் அவர்களுடன் எந்த விவாதமும் செய்ததில்லை, ஆனால் இப்போது பொதுமக்களின் பரிந்துரைகளை நாங்கள் கேட்க விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.