பினாங்கு கடலடி சுரங்கப்பாதை ஆகட்டும், சிலாங்கூர் நில ஊழலாகட்டும், எதனையும் விசாரித்து குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்குவது பற்றி மக்களுக்குப் பாரபட்சமின்றிச் செய்தி வழங்குவதை வரவேற்கிறோம். ஆனால் அத்துறைகளின் பணி அழுகும் பிள்ளைக்கு இனிப்பு தருவதாக மட்டுமே அமைந்துள்ளது. நாட்டை உண்மையான திருடர்களிடமிருந்தும் ஊழல் பெருச்சாளிகளிடமிருந்தும் காப்பாற்றுவதில் அக்கறைகாட்டவில்லை என்பதே இந்நாட்டின் மிகப் பெரிய பின்னடைவு என்கிறார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
மலேசிய ஊழல் ஒழிப்புத் துறை, போலீஸ் துறை மற்றும் அரசாங்க ஆதவு ஊடகங்கள் அவற்றின் பணியைச் சரிவரச் செய்திருந்தால் ஊழலில் மலேசியாவும் அதன் பிரதமரும் உலகமகா சாதனைகள் படைத்திருக்க முடியாது; ஆசியானில் ஊழல் சூரனாகவும் உயர்ந்திருக்க முடியாது என்பதை சமீபகாலச் சம்பவங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
ரிங்கிட் 20 மில்லியன் மதிப்பிலான பினாங்கு கடலடி சுரங்கப்பாதை அமைப்பு தொடர்பில் ஓர் ஊழலை மறைக்க மற்றொரு ஊழா? அது குறித்து மலேசிய ஊழல் ஒழிப்புத் துறை, போலீஸ் மற்றும் அதனை வெளியிடுவதில் அரசாங்க ஆதரவு ஊடகங்கள் ஆற்றும் பணிகள் ஏமாற்றமளிப்பதாக உள்ளதுடன் நாட்டிற்கும் அடுத்த தலைமுறைக்கும் மிகக் கேவலமான முன்னுதாரணத்தை வழங்குவதாக இருக்கிறது.
அந்த ஊழலில் இரண்டு டத்தோக்கள் சிக்கினார்கள் என்பது வெளிப்படையான செய்தி. ஆனால் ஒருவரின் சொத்து மட்டும் முடக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்படும் போது, மற்றொருவரின் நிலை என்ன? அவர் அம்னோ உறுப்பினர் என்பதால் ஊழலிலும் சிறப்புச் சலுகையா? அந்த அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் யாத்திரிகர்கள் வாரியத் தலைவர் என்றபடியால் பயமா? அவர் பிடிபட்டால், மலேசியாவின் மகா ( மெகா) ஊழல் 1எம்டிபி மற்றும் யாத்திரிகர்கள் வாரியத்தின் பங்கு குறித்து நோண்ட வேண்டிவரும் என்பதால் காட்டப்படும் சலுகையா என்று வினவினார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
கடந்த வியாழக்கிழமை, த ஸ்டார் நாளிதழ் வெளியிட்ட செய்தி மேலும் சிறப்பானது. ”இவர் எப்படி, எப்போது, எவரிடம் டத்தோ ஸ்ரீ பெற்றார்? எப்படி கோடீஸ்வரர் ஆனார்”, என்ற கேள்விகள். இந்தக் கேள்விகளை ஏன் இப்பொழுது எழுப்ப வேண்டும்? இதனைப் பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல, போலீஸ், ஊழல் ஒழிப்பு உளவுத்துறை, பிரதமரின் பாதுகாப்பு வளைய அதிகாரிகள் உட்பட, அமைச்சர்களும் பிரதரும் நீண்ட நாள்களுக்கு முன்பே கேட்டிருக்க வேண்டும்!
அப்படிப்பட்டக் குற்றவாளிகள் பிரதமருடன், அமைச்சர்களுடன் நெருங்கிப் பழக விட்டு, அவர்களைத் தேர்தல் பிரச்சாரப் பீரங்கிகளாக, நிகழ்ச்சிகளில் முக்கியப் பிரமுகர்களாக, நன்கொடையாளர்களாகக் காட்டி போலியான கௌரவத் தோற்றத்தை அளித்து யார் குற்றம்? அவர்களின் ஏமாற்று மற்றும் திருட்டு லீலைகள் மீது பல புகார்கள் இருந்தும் அதனைக் கண்டுகொள்ளாத பத்திரிக்கைகளும், அமைச்சர்களும், பிரதமரும் இப்பொழுது இவர் யார், ஏன், எப்படி என்று விதவிதமாகக் கேள்வி எழுப்புவதில் என்ன நீதி, தர்மம், நேர்மையுண்டு? இல்லை, இவை எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா? இது மக்களை ஏமாற்ற நடக்கும் நாடகமா?
இந்த 20 மில்லியன் ஊழல் மீது தூள்பறக்கும் விவாதத்தில், துப்பறிவதில் காட்டும் அக்கறையை மலேசிய மக்களிடமிருந்து திருடப்பட்ட 17.6 பில்லியன் ரிங்கிட் 1எம்டிபி-ஜோலோ மெகா திருடு மீது மலேசிய ஊழல் ஒழிப்புத்துறை, போலீஸ் துறை மற்றும் அரசாங்க அதிகாரபூர்வ ஊடகங்கள் ஏன் காட்டவில்லை என கேட்கிறார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
அமெரிக்கப் புலன் விசாரணை பிரிவு 1எம்டிபி- ஜோலோ மெகா திருட்டில் இன்னும் ரிங்கிட் 6.7 பில்லியன் சொத்து, நாணயத்திற்கான ஆவணங்களைத் தேடிவரும் வேளையில், சுமார் 1பில்லியன் ரிங்கிட் வெள்ளி மதிப்பிலான உல்லாசக் கப்பல் இந்தோனேசியாவில் பிடிபட்டுள்ளது.
அதனுடன் வேறு என்ன சிக்கியது? இன்னும் எதை எல்லாம் கொண்டு வந்தார்கள்? அவை தங்கமாக, வைரமாக, பணமாக, சொத்துகளின் பத்திரமாக, ஓவியமாக அல்லது வேறு என்னவாக இருக்கின்றன என்பதை அறிய இந்தோனிசிய உளவுத்துறை அலசி ஆராயும் வேளையில், இங்கே, அந்த 17.6 பில்லியன் ரிங்கிட்டுக்கு சொந்தக்காரர்களான நாம் என்ன செய்கிறோம்? அந்த உல்லாசக் கப்பல் பற்றிய செய்தியே இருட்டடிப்பு செய்யப் படுகிறது!
மலேசிய ஊழல் ஒழிப்புத் துறை, போலீஸ் துறை, நமது புலன் விசாரணை அமைப்புகள், கடற்படை மற்றும் அரசாங்க அதிகாரபூர்வ ஊடகங்கள் ஏன் இந்த 17.6 பில்லியன் ரிங்கிட் மீது அக்கறை செலுத்தவில்லை? அவர்களை தடுப்பது, தண்டிப்பது யார்? ஏன் நாட்டில் எதுவுமே நடக்காதது போல் போலித்தனம் ? தக்க பதிலை மலேசிய மக்களுக்கு அரசாங்கம் வழங்குமா?
இண்டர்போல் எனப்படும் உலக குற்றத்தடுப்பு, உளவு அமைப்பு 1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உல்லாச கப்பல் அமெரிக்காவிலிருந்து கடத்தப்பட்டிருக்கும் இரகசியத்தை இந்தோனேசிய உளவுத்துறையுடன் பரிமாறிக் கொண்டுள்ள போது, அந்த சொத்து உரிமையாளர்களான மலேசியாவிடம், நம் உளவுத்துறையிடம் ஏன், எப்படி ஏதும் தெரிவிக்கவில்லை, அயல் நாட்டினருக்கும் நமது போலீஸ் இலாக்கா மீது அவ நம்பிக்கையா, அல்லது மலேசியா அதில் அக்கறை கொள்ளவில்லையா என வினவினார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.