அடுத்த 5 ஆண்டுகளில், வடக்கில் புக்கிட் காயு ஈத்தாமை முக்கியப் போக்குவரத்து தளமாக உருவாக்கும் முயற்சியில் ஒன்றாக, அலோர்ஸ்டார், சுல்தான் அப்துல் ஹலிம் விமான நிலையம் (எல்.தி.எஸ்.ஏ.எச்.) சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்படும்.
பிரதமர் நஜிப் துன் ரசாக் இதனை அறிவித்தபோது, தாய்லாந்தின் எல்லைப் பகுதியான புக்கிட் காயு ஈத்தாம், முதலீட்டாளர்களின் பிரதான ஈர்ப்பாக அமைய, எல்.தி.எஸ்.ஏ.எச். மேம்பாடு செய்யப்படும் என்றார்.
“இரண்டாவது நிதி அமைச்சரிடம் கலந்துபேசிய பின்னர், அலோர் ஸ்டார் விமான நிலையம் (சுல்தான் அப்துல் ஹாலிம்) மேம்படுத்தப்படும்,” என்று இன்று கெடாவில், எக்ஸ்போ முவாஃபாகாட் கெடா நிறைவு விழாவின் போது நஜிப் கூறினார்.
லங்காவியை, கெடா மாநிலத்திற்கான பிரதான நுழைவாயிலாக உருவாக்க, லங்காவி சர்வதேச விமான நிலையத்தைப் பெரியதாக மாற்றியமைக்க வேண்டும், அதற்கு ‘ஏரோபிரிட்ஜ்’ சேர்க்க வேண்டும் என்று மலேசிய ஏர்போட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்.எ.எச்.பி.) அறிவுறுத்தப்பட்டுள்ளது என நஜிப் தெரிவித்தார்.
“இது நேரடி விமானச் சேவைக்காக, ‘ஏரோபிரிட்ஜ்’ இல்லை என்றால், எமிரேட்ஸ் போன்ற பெரிய விமானங்கள், இந்த மாநிலத்திற்கு வராது, எனவே ‘ஏரோபிரிட்ஜ்’ வேண்டும்,” என்று அவர் கூறினார்.
கெடா மாநிலம் ஓரங்கட்டப்படாது, நாட்டின் அரிசி களஞ்சியமாக விளங்கும் அம்மாநிலத்திற்கு, ஒரு காணிக்கையாக, மத்திய அரசாங்கத்திடமிருந்து உதவிகள் தொடரும் என்றும் பிரதமர் சொன்னார்.
“மாநிலத்தின் நிதி மூலவளங்கள் மிகவும் குறைவாக இருப்பதால், கெடா அரசுக்கு மத்திய அரசாங்கத்தின் ஆதரவு தேவைப்படுகிறது….நாம் கெடா மாநிலத்திற்கு நன்றி பாராட்ட வேண்டும்,” என்றார் அவர்.
கெடா மாநில மக்களுக்கு, மத்திய அரசாங்கம் வழங்கும் உதவிகள், எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல், ‘தவிடு’ அல்ல; மாறாக அம்மாநிலத்தில் ஏழ்மையில் இருக்கும் மக்களுக்கு உதவுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.
கெடா மாநிலத்தில், கிட்டதட்ட 600,000 மக்கள் பிரிம் உதவித் தொகையைப் பெறுவதாகவும் நஜிப் தெரிவித்தார்.
மேலும், கெடா மக்களுக்கு உதவ, மாநிலத்தின் நீர் வழங்கல் பிரச்சினைகளைக் கையாளும் வகையில், ஐந்து நீர் சுத்திகரிப்பு ஆலைகளை மேம்படுத்த ரிம1 பில்லியனை ஒதுக்கவுள்ளதாகவும் நஜிப் தெரிவித்தார்.
“அந்த 5 ஆலைகளும் கட்டங்கட்டமாக சீரமைக்கப்படும், இன்னும் அதிகமான உதவிகளை மாநில மக்கள் பெற முடியும், கெடா தொடர்ந்து பாரிசான் நேசனல் தலைமையின் கீழ் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்,” என்றார் பிரதமர் நஜிப்.