குவான் எங் : நஸ்ரி பற்றிய என் விமர்சனத்தை, பிஎன் ஊடகங்கள் வெளியிடவில்லை

மசீச மற்றும் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அஸிஸ் இடையே ஏற்பட்டுள்ள குழப்பங்களை, மசீச தேசியத் தலைவர் டிஏபி-யின் பக்கம் திசை திருப்பப்பார்க்கிறார் என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் குற்றஞ்சாட்டி உள்ளார்.

முன்னதாக, சீன சமூகத்தின் மத்தியில், மரியாதைக்குரிய நபராக இருக்கும், பெரும் வணிகத் தலைவரான டான் ஸ்ரீ ரோபர்ட் குவோக்கைத் தாக்கிய நஸ்ரியை, லிம் விமர்சிக்கவில்லை என லியோ குற்றம் சாட்டினார்.

லிம் அக்குற்றச்சாட்டை மறுத்ததோடு, நஸ்ரி மீதான தனது விமர்சனத்தை, அரசாங்க கட்டுப்பாட்டு ஊடகங்கள் வெளியிடவில்லை என்றும் கூறினார்.

“நஸ்ரி உட்பட, அம்னோ மற்றும் அதன் தலைவர்களை, (குவோக்கை தாக்கியதற்கு) டிஏபி தலைவர்கள் விமர்சித்துள்ளனர். என் சமீபத்திய அறிக்கையானது, மார்ச் 2-ம் தேதி, மசீச தனது 69-வது நிறைவு கொண்டாட்டத்திற்கு முந்தைய நாள் வெளியிடப்பட்டது.

“ஆனால், எனது அறிக்கை பி.என். ஊடகங்களில் வெளிவரவில்லை. இப்போது லியோ, நான் எந்த விமர்சனமும் செய்யவில்லை என என் மீது குற்றம் சுமத்துகிறார்,” என லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

“தொழிலதிபர் குவோக்கைத் தாக்கிய சில அம்னோ தலைவர்கள் இன்னும் மன்னிப்பு கேட்காத பட்சத்தில், மசீச இப்பிரச்சினையைத் தள்ளுபடி செய்யக்கூடாது,” எனவும் தனது அறிக்கையில் லிம் குறிப்பிட்டுள்ளார்.