கருப்புச் சட்டை அணிந்துவந்த நஸ்ரியைப் பணி நீக்கம் செய்ய வேண்டும், மசீச வலியுறுத்து

மசீச மற்றும் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அஸிஸ் இடையிலான மோதல், மசீச இளைஞர் பிரிவினரின் அண்மைய விமர்சனத்தின் வழி இன்னும் தொடர்ந்து வருகிறது.

நேற்று, சுங்கை பட்டாணியில் நடந்த சீனப் புத்தாண்டு உபசரிப்பில், கருப்புச் சட்டை அணிந்து வந்த நஸ்ரியின் போக்கு குறித்து, கெடா மாநில மசீச இளைஞர் பிரிவு தலைவர், தான் சீ சியோங் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘கலாச்சார உணர்திறன்’ இல்லாத நஸ்ரியை, சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு, ஓர் அறிக்கையில் தான் சீ சியோங் பிரதமரை வலியுறுத்தி உள்ளார்.

“சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சருக்குக் கொஞ்சங்கூட ‘கலாச்சார உணர்திறன்’ இல்லை.

“சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்புக்கு அவர் கருப்புச்சட்டை அணிந்து வருகிறார்.

“அவர் ஒரு திமிர்பிடித்தவர் என்று நாங்கள் அறிவோம், ஆனால் அவர் ஒரு முட்டாள் என்பது நமக்கு தெரியாது,” என தான் கூறியதாக சைனா பிரெஸ் பத்திரிகை மேற்கோளிட்டுள்ளது.

பொதுவாக, சீன சமூகத்தின் கலாச்சாரத்தில் கருப்பு துரதிருஷ்டவசமாக கருதப்படுகிறது, பண்டிகை நாளான சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கருப்பு நிறம் பயன்படுத்தப்படுவதில்லை.

பிரதமரும் மசீச தேசியத் தலைவரும் கலந்துகொண்ட, நஸ்ரி ஏற்பாட்டிலான அந்த விருந்துபசரிப்பு நிகழ்ச்சி ஒரு மோசமான சூழ்நிலையில் இருந்ததாகவும் அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.