மலேசியப் போலிஸ் அதிகாரிகள் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ள ஆஸ்திரேலிய போலிசாரிடமிருந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) தகவல்கள் பெற வேண்டும் என்று புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் கூறியுள்ளார்.
புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வு துறை இயக்குநர் வான் அஹ்மட் நஜ்முட்டின் முகமட் தூய்மையானவர் என்று கூறும், உள்நாட்டுப் போலீசாரின் கூற்றுகளை, எம்.ஏ.சி.சி. முழுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என வழக்குரைஞருமான ராம்கர்ப்பால் தெரிவித்தார்.
“இந்த விஷயத்தில், ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் விசாரணை நடந்துள்ளதால், இங்கு விசாரணை மேற்கொள்ள, இன்னொரு அறிக்கைக்காக எம்.ஏ.சி.சி. காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
“எம்.ஏ.சி.சி. ஆஸ்திரேலிய காவல்துறையினரிடம் இருந்து தகவல் பெறுவதோடு, விசாரணைக்கும் ஒத்துழைக்க வேண்டும், காரணம் அது ஒரு தீவிரக் குற்றச்சாட்டு ஆகும்.
“எனவே, இந்த விஷயத்தை விசாரிக்க, எம்.ஏ.சி.சி. ஒரு சுதந்திரமான விசாரணையை அமைக்க வேண்டும். சுதந்திரமான, வெளிப்படையான விசாரணை வேண்டுமெனில் உள்நாட்டு விசாரணையை மட்டும் நம்பிப் பயனில்லை,” என்றும் அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.