எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலின் போது, பிரச்சார நடவடிக்கை ஏற்பாடுகள், வேட்பாளர் நியமனம், வாக்குப் பதிவு ஆகியவைப் பாதுகாப்பாக நடைபெற, பினாங்கில் 5,500 அதிகாரிகளும் போலிஸ்காரர்களும் பணியில் அமர்த்தப்படுவர்.
பினாங்கில் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் உறுப்பினர்களும், பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயார்நிலையில் இருப்பதாக, பினாங்கு காவல்துறை தலைவர் ஏ.தெய்வீகன் தெரிவித்தார்.
“சூழ்நிலையைப் பாதுகாப்பாகவும் சீராகவும் வைத்திருக்க, இன்னும் கூடுதலான அதிகாரிகள் அல்லது போலீஸ்காரர்கள் தேவைப்பட்டால், நான் புக்கிட் அமானின் உதவியை நாடுவேன்.
“ஆனால், பினாங்கில் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை போதுமானதாக உள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன்,” என இன்று ஜோர்ஜ்டவுனில், தேர்தல் முன்னோட்ட போலிஸ் பயிற்சியைக் கண்ணுற்றப் பின் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இந்தப் பயிற்சியில், தேர்தல் முடிவுகள் குறித்து அதிருப்தி அடைந்த கட்சி ஆதரவாளர்கள் கலகத்தில் ஈடுபட்டால், அவர்களைச் சமாளிப்பது எப்படி என்பது பற்றியும் செய்து காட்டப்பட்டது.
வரவிருக்கும் ஜிஇ14-ல் சவாலாக விளங்கக்கூடிய, மாநிலத்தின் சில முக்கியமான இடங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், முழு பட்டியல் அடுத்த ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும் என்றும் தெய்வீகன் மேலும் தெரிவித்தார்.