போலீஸ் காவலில் இறப்போர் எண்ணிக்கை: உண்மை நிலவரம் என்ன?

எஸ்.பாலமுருகன், பி.கருணாநிதி, என்.தர்மேந்திரன் –   இவர்கள்  நீதிமன்றத்துக்குச்  செல்வதற்குமுன்  போலீஸ்  காவலில்    இருந்தபோதே   இறந்துபோனவர்களில்    சிலர்.

அது  என்னமோ  தெரியவில்லை,  லாக்-அப்புகளில்   ஏற்படும்  மரணங்களில்   பெரும்பாலும்   இந்தியர்களே   சம்பந்தப்பட்டிருப்பது  போன்ற   ஒரு   தோற்றப்பாடு   உருவாகியுள்ளது.

ஊடகங்களில்   வெளிவந்த  போலீஸ்   காவலில்     இறந்துபோவோர்    பற்றிய     செய்திகள்    பெரும்பாலும்    இந்தியர்கள்  பற்றிய    செய்திகளாகவே  இருப்பதைப்  பார்க்கிறோம்.     மனித  உரிமை  போராட்ட அமைப்பான   சுவாராம்    திரட்டிவைத்துள்ள   தரவுகளும்   அப்படித்தான்  காண்பிக்கின்றன.

ஆனால்,  ஆராய்ந்து   பார்த்ததில்    போலீஸ்   காவலில்   இறந்துபோகும்  பெரும்பாலோர் குறித்த   தகவல்கள்,  குறிப்பாக   மலாய்க்காரர்களின்    எண்ணிக்கை    ஊடகங்களில்     வெளிவருவதில்லை  என்பது   தெரிய  வந்தது.

2017,  மார்ச்   28-இல்      உள்துறை    அமைச்சு    நாடாளுமன்றத்தில்  அளித்த  ஒரு   பதிலில்         2002க்கும்  2016க்குமிடையில்  போலீஸ்  காவலில்  257  இறப்புகள்   நிகழ்ந்ததாகக்  கூறியிருந்தது.

ஆனால்,   62  பேர்  இறந்த  தகவல்கள்  மட்டுமே  சுவாராமிடமும்   ஊடகங்களிடமும்    தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி    பார்த்தால்   இறந்துபோனவர்களில்   நாலில்  ஒருவர்  பற்றிய  செய்தி  தனக்கோ   மற்ற   ஊடகங்களுக்கோ   கிடைக்கவில்லை    என்கிறது  சுவாராம்.

லாக்-அப்பில்   இறந்துபோகும்   பெரும்பாலோர்  பற்றிய   தகவல்கள்   வெளியில்   தெரியாமல்   போவதற்குப்  பல  காரணங்கள்   உள்ளன.

மலேசிய   மனித     உரிமை    ஆணைய(சுஹாகாம்)த்தின்   ஆணையர்   ஜெரால்ட்    ஜோசப்,   இறப்பு  குறித்து   சம்பந்தப்பட்ட   குடும்பத்தார்     தெரிவிக்கும்போதுதான்   சுஹாகாமுக்கும்   சுவாராமுக்கும்  மற்ற  ஊடகங்களுக்கும்   அது  பற்றித்   தெரிய  வருகிறது     என்றார்.

“சிலருக்குக்  குடும்பம்   என்ற  ஒன்று   இருப்பதில்லை.  அதனால்   அவர்களின்  இறப்புப்  பற்றிச்  சொல்லவோ   கவலைப்படவோ   ஆள்  இருக்காது”,  என்றார்  ஜோசப்.

மேலும்,   போலீஸ்   காவலில்   இறப்பு   நிகழ்ந்த  பிறகு   அடுத்து   என்ன   செய்வது   உதவிக்கு   யாரை   நாடுவது   போன்ற   விவரங்கள்   பலருக்குத்   தெரிவதில்லை  என்றாரவர்.

“சுவாராம்,  சுஹாகாம்,  என்ஜிஓ-கள்  பற்றியோ   ஈஏஐசி(அமலாக்க நிறுவன நேர்மை ஆணையம்)  பற்றியோ   அறியாத  மக்கள்   இருக்கிறார்கள்.  நாங்கள்  இருப்பது  பற்றி    அவர்களுக்குத்   தெரியாது.  இதுதான்  உண்மை”,  என்றாரவர்.   .

சுஹாகாமின்    புகார்,  கண்காணிப்பு   பிரிவின்    துணைச்     செயலாளர்    சைமன்   கருணாகரன்,      நாடு  முழுவதுமுள்ள       எல்லா     லாக்-அப்புகளைக்   கண்காணிப்பது      சுஹாகாமுக்கோ   மற்ற    அமைப்புகளுக்கோ    இயலாத    காரியம்    அதனால்தான்   லாக்-   அப்புகளில்     இறந்துபோனதாக   அறிவிக்கப்பட்டவர்   எண்ணிக்கையைவிட    அதிகாரப்பூர்வ   எண்ணிக்கை    அதிகமாக  இருக்கிறது    என்றார். நாடு  முழுக்க   700   லாக்-அப்புகள்   உள்ளன  என்றும்   அவற்றில்  400   அதிகம்   பயன்படுத்தப்படுகிறது    என்றும்    அவர்   சுட்டிக்காட்டினார்.

“400  லாக்-அப்புகளில்   என்ன   நடக்கிறது,  யார்  இறக்கிறார்கள்    என்பதையெல்லாம்   கண்காணிக்க  இயலாது-  மக்கள்   தகவல்   தெரிவித்தால்  தவிர”,   என்றாரவர்.