போலிச் செய்திக்கு எதிரான சட்டத்துக்கு ஆகோங் ஆதரவு

மாமன்னர்  ஐந்தாம்  சுல்தான்  முகம்மட்,    சமூக     ஊடகங்களில்   போலிச்  செய்திகளைப்  பரப்புவதைக்  கட்டுப்படுத்த   அரசாங்கம்   சட்டம்  கொண்டுவருவதை   ஆதரிப்பதாகக்  கூறினார்.

இன்று  13வது  நாடாளுமன்றத்தின்  ஆறாம்   தவணையின்  முதலாவது   கூட்டத்தைத்   தொடக்கி  வைத்தபோது  மாமன்னர்   அவ்வாறு   கூறினார்.

போலிச்  செய்திகளைத்   தடுக்கும்  சட்டத்துடன்  தேர்தல்    ஆணையத்தின்   தொகுதி  எல்லைகளைத்   திருத்தி  அமைக்கும்   பரிந்துரைகளும்    நடப்பு      நாடாளுமன்றக்  கூட்டத்தில்   தாக்கல்   செய்யப்படும்   எனத்   தெரிகிறது.

சமுதாயத்தின்  விழுமங்களையும்  பண்பாட்டையும்   உருவாக்குவதில்  சமூக   ஊடகங்களுக்கு   “முக்கிய   பங்குண்டு”,  என  ஆகோங்   தம்முரையில்  கூறினார்.

“சமுதாயத்தின்  நற்பண்புகளையும்   அறநெறி  விழுமியங்களையும்   கட்டிக்காக்கும்  பொறுப்பு   அனைவருக்கும்   உண்டு.

“எனவே,  சமூக  ஊடகங்களில்   போலிச்  செய்திகளையும்   அவதூறுகளையும்    தடுக்க  அரசாங்கம்   சட்டம்  கொண்டுவர    உத்தேசித்திருப்பதை   நான்  முழுமையாக    ஆதரிக்கிறேன்”,  என்றாரவர்.

செய்திகளை  முறைப்படுத்த    ஏற்கனவே   பல    சட்டங்கள்   உள்ளதால்  புதிதாகக்   கொண்டுவரப்படும்   சட்டம்    கருத்துச்   சுதந்திரத்தைக்  கட்டுப்படுத்தப்   பயன்படுத்தப்படலாம்   என  விமர்சகர்கள்   கவலை    தெரிவித்துள்ளனர்.