உல்லாசப் படகு ஈக்குவானிமிட்டியை திரும்பப்பெறுவதற்கு டிஒஜே குழு இந்தோனேசியா வந்துள்ளது

 

மலேசிய 1எம்டிபிக்கு சொந்தமான பணத்தை தவறாகப் பயன்படுத்தி வணிகர் ஜோ லோ என்பவருக்கு யுஎஸ்$250 மில்லியன் (ரிம1 பில்லியன்) செலவில் கட்டப்பட்ட உல்லாசப் படகு ஈக்குவானிமிட்டியை பாலிக்கு அப்பால் இந்தோனேசியா கைப்பற்றியது.

இந்தோனேசியாவால் கைப்பற்றப்பட்ட அப்படகை திரும்பப்பெறுவதற்காக அமெரிக்க நீதித் துறை (டிஒஜே) அதிகாரிகள் தற்போது இந்தோனேசியா வந்துள்ளனர்.

கடந்த ஒரு வார காலமாக டிஒஜே அதிகாரிகள் ஜாகர்த்தாவில் இருப்பதாக டேனியல் சிலிதோங்கா, இந்தோனேசிய மத்திய போலீஸ் இலாகாவின் பொருளாதார மற்றும் சிறப்புக் குற்றங்களுக்கான துணை இயக்குனர், மலேசியாகினியிடம் கூறினார்.

இவ்வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களும் அமெரிக்க அதிகாரிகளால் கையாளப்படுகின்றன என்று கூறிய டேனியல், அந்தப் படகு இருக்கும் இடத்தை அடையாளம் கண்டு அதைக் கைப்பற்ற மட்டுமே இந்தோனேசியாவின் உதவி கோரப்பட்டது. அதன் பின்னர், அதைக் கோரும் நாட்டிடம் (அமெரிக்கா) சட்டப்படி ஒப்படைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்தோனேசியா எப்பிஐக்கு (FBI) உதவி மட்டும் செய்கிறது. ஆகவே, இங்கு நடத்தப்பட விசாரணையின் மூலம் கிடைக்கப்பட்ட ஆதாரங்களையும் மற்ற சம்பந்தப்பட்ட விவகாரங்களையும் அவர்களிடம் ஒப்படைத்து விடுவோம் என்று அவர் விளக்கம் அளித்தார்.

1எம்டிபி சம்பந்தமாக நடந்து கொண்டிருக்கும் விசாரணையில் உதவும்படி எப்பிஐ இந்தோனேசிய அதிகாரிகளை கேட்டுக்கொண்டதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த வாரம், அந்த உல்லாசப் படகை தொடர்ந்து எட்டு நாள்களுக்கு பின்பற்றிச் சென்று இந்தோனேசிய மத்திய போலீஸ் படை, எப்பிஐ அதிகாரிகள் மற்றும் கடற்படை ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழு பாலியில் கைப்பற்றியது.

மலேசியாவின் சட்டத்துறை தலைவார் முகமட் அபாண்டி அலி மலேசியா அப்படகு மீது உரிமை கோராது  ஏனென்றால் அது மலேசிய அரசாங்கத்திற்கு சொந்தமானதல்ல என்று கடந்த வாரம் கூறினார்.