குவோக் பற்றிய கட்டுரைகளை அகற்ற ராஜா பெட்ராவுக்கு உத்தரவு

 

கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் பற்றி ராஜா பெட்ரா கமாருடின் வெளியிட்டிருந்த கட்டுரைகளை அகற்றும்படி அவருக்கு மலேசிய தொடர்புகள் மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) உத்தரவிட்டிருக்கிறது.

மலேசியா டுடேயில் வெளியிடப்பட்டுள்ள அக்கடிதத்தின்படி, அக்கட்டுரைகள் தொடர்புகள் மற்றும் பல்லூடகச் சட்டம், செக்சன் 233 ஐ மீறியுள்ளது.

அக்கட்டுரைகளில் அந்த கோடீஸ்வரர் ஆளும் பின் அரசாங்கத்தைக் கவிழ்க்க டிஎபிக்கு நிதி உதவி அளித்தார் என்று கூறப்பட்டிருந்தது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மலேசியன் இன்சைட் என்ற செய்தித் தளத்திற்கும் குவோக் நிதி உதவி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அக்குற்றச்சாட்டுகளை குவோக்கும் டிஎபியும் மறுத்துள்ளன. ஆனால், அதற்கு முன்னால் அம்னோவின் உயர்மட்ட தலைவர்கள், தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் மற்றும் நஸ்ரி அப்துல் அசிஸ் உட்பட, அந்தக் கோடீஸ்வரரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

குறிப்பாக, அமைச்சர் நஸ்ரியின் தாக்குதலை மசீசவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவரை சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் அது கோரிக்கை விடுத்துள்ளது.

குவோக்கை ஆண்மையற்றவர் மற்றும் கோழை என்று விமர்சித்த அமைச்சர் நஸ்ரி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வருமாறு அவருக்கு சவால் விட்டார்.

குவோக் பற்றிய கட்டுரைகள் இப்போது அகற்றப்பட்டுள்ளன.