ஈக்குவானிமிட்டிமீதான அவசரத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் நிராகரித்தார்

வணிகர்   ஜோ லோவுக்குச்    சொந்தமான    உல்லாசப் படகு ஈக்குவானிமிட்டிமீது     அரசாங்கம்   உரிமை  கோறாது   என்ற   சட்டத்துறைத்    தலைவர்     அபாண்டி   அலியின்   அறிக்கை   குறித்து   பிரதமர்  நஜிப்    அப்துல்   ரசாக்   விளக்கமளிக்க   வேண்டும்    என்று       வலியுறுத்தும்   அவசரத்   தீர்மானமொன்றை   மக்களவைத்   தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா   நிராகரித்தார்.

இன்று   அத்தீர்மானத்தைக்  கொண்டுவந்த   கூய்   ஹிஸியாவ்  லியோங் (பிகேஆர்-  அலோர்  ஸ்டார்),   அது    மக்கள்   முக்கியமாக   கருதும்   ஒரு   விவகாரம்   என்றார்.

“அமெரிக்க   நீதித்துறைக்  கைப்பற்றிய     சொத்துகள்   1எம்டிபியில்  சுருட்டப்பட்ட   பணத்தில்    வாங்கப்பட்டவை    என்பதால்    அச்சொத்துகளை  மீட்குமாறு   சட்டத்துறைத்    தலைவர்   பணிக்கப்படுவாரா   என்பதைப்  பிரதமர்   நாடாளுமன்றத்தில்   விளக்கிக்கூறுவது  அவசியம்”,  என்றாரவர்.

அவருக்குப்   பதிலளித்த  பண்டிகார்,  இத் தீர்மானத்தை    விவாதிக்க   அனுமதிப்பது    1எம்டிபி  விவகாரம்   தொடர்பில்    ஏற்கனவே   தாம்   எடுத்த   முடிவுகளை   மீறுவதாக    அமையும்   என்றார்.

“நான்   அறிந்தவரை,   விசாரணைக்கு  உள்பட்ட     சொத்துகளில்   உல்லாசப்  படகும்   ஒன்று.  அதனால்தான்   அதன்மீதான  தீர்மானத்தை   விவாதத்துக்கு   விட   மறுக்கிறேன்”,  என்று  பண்டிகார்   கூறினார்.