ஹரப்பானுக்கு பொதுச் சின்னம், மகாதிர் ஊக்கமூட்டுகிறார்

 

ஹரப்பானுக்கு ஒரு பொதுச் சின்னம் குறித்து முடிவு செய்ய அக்கூட்டணியின் பங்காளித்துவ கட்சிகளுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதாக அதன் தலைவர் மகாதிர் கூறுகிறார்.

ஹரப்பானை அதன் சின்னத்துடன் ஒரு முறையான கூட்டணியாக பதிவு செய்ய மன்றங்களின் பதிவாளர் மறுத்து விட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எழுந்துள்ளது.

ஹரப்பானின் அடுத்த தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்தில் ஹரப்பானை பிரதிநிதிக்கும் ஒரு பொதுச் சின்னம் குறித்து ஒரு முடிவு எடுப்பதற்காக இந்த ஒரு வார காலம் நிர்ணயிக்கப்பட்டது என்று நாடாளுமன்ற எதிரணித் தலைவரின் அலுவலகத்தில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இன்று மகாதிர் கூறினார்.

இதற்கு முன்னதாக, அங்கு நடைபெற்ற ஹரப்பான் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்திற்கு மகாதிர் தலைமை தாங்கினார்.

தேர்தல் இருக்கைகளுக்கான பேச்சுவார்த்தைகள் பற்றி குறிப்பிட்ட மகாதிர், கெடா, நெகிரி செம்பிலான், கூட்டரசுப் பிரதேசம், ஜோகூர், திரங்கானு, பகாங் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் தீர்வுகாணப்பட்டு விட்டது என்றார்.

சிறு பிரச்சனைகள் காரணமாக இன்னும் மூன்று மாநிலங்களில் முடிவு எடுக்கப்படவில்லை. விரைவில் தீர்வு காணப்படும் என்றாரவர்.

ஹிண்ட்ராப் மலேசியாவின் பங்களிப்பு

 

பி. வேதமூர்த்தியின் தலைமையிலான ஹிண்ட்ராப், ஹரப்பான் கூட்டணியில் ஒரு பயன்பாடுடைய பங்காளியாக இருக்கும் என்று மகாதிர் அறிவித்தார்.

இன்னொரு பயன்பாடுடைய பங்காளியாக நியுஜென் கட்சி கவனிக்கப்படுகிறது அவர் மேலும் கூறினார்.