பதவி தவணைக்கால வரம்பு குவான் எங்குக்கும் பொருந்துமா?

பக்கத்தான்  ஹரப்பான்   அதன்   தேர்தல்    அறிக்கையில்  பிரதமர்,  முதலமைச்சர்,  மந்திரி   புசார்  பதவிகளில்  இருப்போர்  இரண்டு   தவணகளுக்கு  மட்டுமே   அப்பதவிகளில்    இருக்க   முடியும்    என்று   வரம்பு  கட்டப்போவதாக   வாக்குறுதி   கொடுத்திருப்பதால்,   லிம்  குவான்  எங்    மூன்றாவது   தவணைக்கு  பினாங்கு    முதலமைச்சராவதற்கு    அனுமதிக்கப்படுவாரா  என்பதை  அது    தெரிவிக்க   வேண்டும்.

ஹரப்பான்   ஆட்சியில்   இல்லை   என்றாலும்   லிம்  விசயத்தில்   தவணைக்கால    வரம்பை   அமல்படுத்துவது    அதன்  வாக்குறுதி   உண்மையானதுதான்   என்பதை   நிரூபிப்பதாக  அமையும்   என   கெராக்கான்  இளைஞர்     தலைவர்  டான்   கெங்  லியாங்   இன்று  ஓர்   அறிக்கையில்  கூறினார்.

“ஹரபான்    வாக்குறுதி  உண்மையானதுதான்  என்றால்  தாமதமின்றி  அதை  இப்போதே  செயல்படுத்திக்  காட்டலாம்.

“ஹரப்பான்    அவர்களின்   பினாங்கு  முதலமைச்சர்  தவணைக்காலத்துக்கே   வரம்பு   கட்ட  முடியவில்லை  என்றால்      அவர்கள்  தங்களின்   தேர்தல்  கொள்கை    அறிக்கையில்    தெரிவிக்கும்   மற்ற    தேர்தல்   வாக்குறுதிகளையும்   வாக்காளர்கள்   நம்பக்  கூடாது”,  என்று  டான்  கூறினார்.

ஹரப்பானுக்கு  முன்பிருந்த   பக்கத்தான்  ரக்யாட்டும்   அது   வெற்றிபெற்ற   மாநிலங்களில்  தேர்தல்   வாக்குறுதிகளில்  பலவற்றை   நிறைவேற்றவில்லை  என்றவர்   சொன்னார்.

நிறைவேற்றப்படாத      வாக்குறுதிகளிக்  ஊராட்சி  மன்றத்   தேர்தல்கள்,  சிலாங்கூரில்   இலவச   உயர்க்  கல்வி,   பயனீட்டுக்  கட்டணம்   உயராது  முதலியவை   அடங்கும்   என்றார்.