1எம்டிபி கேள்விகளை நிராகரித்த பண்டிகார் பதவி விலக வேண்டும்: டிஏபி எம்பிகள் அறைகூவல்

தொழில்  அதிபர்  ஜோ  லோ-வின்  ஆடம்பரப்  படகு  கைப்பற்றப்பட்ட   சம்பவம்  மீதான  அவசரத்   தீர்மானத்தையும்    1எம்டிபி  தொடர்பான  கேள்விகளையும்  நிராகரித்த   மக்களவைத்   தலைவர்   பண்டிகார்   அமின்  மூலியா   பதவி  விலக  வேண்டும்   என  மூன்று  டிஏபி  எம்பிகள்  கோரிக்கை  விடுத்துள்ளனர்.

ங்கா  கொர்  மிங்(தைப்பிங்),  ங்கே  கூ  ஹாம்(புருவாஸ்),  வி.சிவகுமார்(பத்து  காஜா)   ஆகிய  மூவரும்  விடுத்த  ஒரு   கூட்டறிக்கையில்     மாண்புமிகு  மன்றம்   “ஊழலை  மூடிமறைப்பதற்குத்   துணைபோகக்  கூடாது”  என்று  கூறினர்.

“அவைத்   தலைவர்    என்ற  முறையில்  பண்டிகார்   உண்மையை   நிலைநிறுத்தத்  தவறிவிட்டார்   என்பதால்    அடுத்து   அவர்  செய்யக்கூடிய   உத்தமமான    காரியம்  பதவி   விலகுவதுதான்.

“இல்லையேல்   நாடாளுமன்றம்   அதன்  மாண்பையும்    மதிப்பையும்   இழந்துவிடும்”,  என்ரவர்கள்   குறிப்பிட்டனர்.

ங்கே   1எம்டிபி  மீது   அரச  விசாரணை   ஆணையம்  அமைக்க  நாடாளுமன்றம்   அவசரத்  தீர்மானம்   கொண்டுவர    வேண்டும்  என்று   கேட்டுக்கொண்டார்.

அரசாங்கத்தால்   உத்தரவாதமளிக்கப்பட்ட   1எம்டிபி-இன்  மொத்த  கடன்  தொகையையும்   அவர்    தெரிந்துகொள்ள      விரும்பினார்.

1எம்டிபி   தொடர்பாகக்  கேட்கப்படும்    கேள்விகள்  நிராகரிக்கப்படுவது    யாரோ    “எதையோ   மறைக்கிறார்கள்,   உண்மையை  மூடி  மறைக்கிறார்கள்”   என்பதைக்  காண்பிப்பதாக    ங்காவும்   சிவகுமாரும்    கூறினர்.

“எம்பிகள்   நாடாளுமன்றத்தில்   கேள்விகள்   கேட்க  அனுமதி    இல்லையென்றால்   அவற்றை  எங்கு  கேட்பது  பசாரிலா(மார்க்கெட்டிலா)?”,  என்றவர்கள்   கேட்டனர்.