பெர்சே 4 மற்றும் 5 பேரணிகளில் கலந்துகொண்ட பின்னர், பெர்சே தேர்தல் சீர்திருத்த கூட்டணி மீதான தனது கருத்துக்களில் மாற்றம் ஏற்பட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் கூறினார்.
பெர்சே 3-க்குப் பிறகு, அப்பேரணியின் எதிர்காலம் மேலும் வன்முறையில் இருக்கும் என தான் கூறியதையும் மகாதிர் ஒப்புக் கொண்டார்.
“ஆமாம், அது என்னுடைய அப்போதையக் கருத்து என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்,” என்று கோலாலம்பூர், உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முகமது ஷக்கி அப்துல் வஹாப் முன்னிலையில் கூறினார்.
சுங்கை பெசார் அம்னோ பிரிவுத் தலைவர், ஜாமால் முகமட் யுனுஸ்-சுக்கு எதிராக, பெர்சே முன்னாள் தலைவர் மரியா சின் அப்துல்லா தொடுத்துள்ள வழக்கில், ஜமாலின் வழக்குரைஞர், நாசரின் இரண்டாவது சாட்சியான மகாதிர் அவ்வாறு பதிலளித்தார்.
மரியாவின் வழக்குரைஞர் என்.சுரேந்திரனின் கேள்விக்கு, “பேரணி (பெர்சே 4) அமைதியாக நடந்தது…. பேரணியில் பங்கேற்றவர்கள் குப்பைகளைப் பொறுக்கி இடத்தைச் சுத்தம் செய்தனர். பெர்சே 4-கிற்குப் பிறகு, நான் பெர்சே 5-ந்திலும் கலந்துகொண்டேன்,” என்றார் மகாதீர்.
நாசர் மீண்டும் கேட்டபோது, பெர்சே சுதந்திரமான, நேர்மையான தேர்தல் ஒழுங்கமைவையே கோருகிறது, அதன் தலைவருக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்தபோது, பெர்சே குறித்த தன்னுடையக் கருத்துக்களை மாற்றிக்கொண்டதாக மகாதீர் தெரிவித்தார்.
செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2016-ல், பெர்சே-இல் ஐ.ஸ். தீவிரவாத ஊடுருவல் உள்ளது என்ற ஜமாலின் குற்றச்சாட்டுக்கு எதிராக மரியா வழக்குத் தொடுத்துள்ளார்.