மகாதீர் என் முன்னாள் சீஃபூ, என்றார் நஸ்ரி

மலேசியாகினி உடனான ஒரு சிறப்பு நேர்காணலில், சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸ், பெயர்கள், இடங்கள் அல்லது பொருள்களைப் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு அவருடைய மனதில் தோன்றுவதை சட்டென அவர் குறிப்பிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அப்போது கேட்கப்பட்ட கேள்விகளில், துன் டாக்டர் மகாதீர் முகமட் என்றதும், சற்றும் யோசிக்காமல் அவர், முன்னாள் ‘சீஃபூ’ (குரு) எனப் பதிலளித்தார்.

பிரதமர் நஜிப் மீது மகாதீர் குற்றஞ்சாட்டத் தொடங்கியதில் இருந்து, மகாதீரை அதிகம் விமர்சித்த நபர் நஸ்ரிதான், ஆனால் அவ்வாறு செய்வதில் தனக்கு மகிழ்ச்சி இல்லை எனவும் நஸ்ரி தெரிவித்தார்.

அரசியல் வேறுபாடுகள், மகாதீர் மீதான தனது மரியாதையைக் குறைத்துவிடவில்லை. இங்கிலாந்தில், தான் சட்டத்துறை மாணவராக இருந்தபோது, அங்கு ஒரு நிகழ்ச்சியில் பேசிய மகாதீரை, தான் பாராட்டி, இரசிக்கத் தொடங்கியதாக நஸ்ரி கூறினார்.

“நான் அவரைத் தாக்கிப் பேசுவது, இங்கே இருந்து வருவதாக நினைக்கிறீர்களா?” என்று நஸ்ரி, தனது நெஞ்சிலும் தலையிலும் கைவைத்து காட்டினார்.

“அது மிகவும் வேதனையாக இருக்கிறது… ஆனால் என் தலைவரை, அவர் இப்போது தாக்கி வருகிறார்,” என்று அவர் கூறினார்.

“நான் இன்று (மகாதிரை) தாக்கி பேசுகிறேன் என்றால், எனக்கு அவரைப் பிடிக்காததால் அல்ல, நாம் தொழில் ரீதியில் நிபுணத்துவமாக இருக்க வேண்டும், அவர் எங்களைத் தாக்குகிறார், அதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க முடியாது.

“நான் பிரதமரைக் காப்பாற்ற வேண்டும், டாக்டர் மகாதீர் பெயர்பெற்ற நபர், அவரை அடிப்பது எளிதல்ல… நீங்கள் கண்களை மூடிக்கொண்டு (அதை செய்ய) வேண்டும்,” என்று அவர் மீண்டும் கூறினார்.

பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், தன்னை நஜிப்பின் “தளபதி” என்று விவரித்தார், மேலும் பிரதமர் அவரது நெருங்கிய நண்பர் என்றும் தெரிவித்தார்.

என்னை முரட்டுத்தனமானவனாக மகாதீர்தான் உருவாக்கினார்

மகாதிர் தன்னை அமைச்சராக நியமித்தது மிகவும் அற்புதமான தருணம், ஒரு மாணவராக அதனைக் கற்பனை செய்து பார்த்ததில்லை என நஸ்ரி தெரிவித்தார்.

“நான் அதுபோன்ற உணர்வை அனுபவித்ததில்லை, அவருடையக் காலத்தில் (மகாதிர்) நான் அமைச்சராக நியமிக்கப்பட்டேன்.

“அவர் எப்போதுமே என் ஆலோசகராக இருந்தார்…..  தலைவரைக் (அம்னோ) காப்பாற்ற அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தார், ஆனால் அவர் இப்போது தலைவர் இல்லை,” என்று அவர் கூறினார்.

அரசியலில் இந்த ‘முரட்டுத்தனத்தை’ நான் மகாதீரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன் என்றார் நஸ்ரி.

“மகாதீர்தான் இப்படி செயல்பட எனக்குக் கற்பித்தார். நான் இனி மாற முடியாது. முன்பு அவர் மலாய்க்காரர்கள் முரட்டுத்தனமாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

“நான் (அவரின் போதனையை) பின்பற்றுகிறேன்…..  அவர் என் சீஃபூ,” என்று, துங்கு அப்துல் ரஹ்மானுக்கு, மகாதீர் எழுதிய திறந்தக் கடிதத்தை நஸ்ரி உதாரணமாக மேற்கோள் காட்டினார்.