பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள இலவச தண்ணீர் உள்பட பல்வேறு வாக்குறுதிகளை ஜோகூர் மக்கள் நம்ப மாட்டார்கள் என்கிறார் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன்.
“முந்தைய தேர்தல் அறிக்கைகளில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையே நிறைவேற்றவில்லை. இப்போது சொல்வதை எப்படி நம்புவது?”, என்றவர் வினவினார். ஹிஷாமுடின் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அம்னோ உதவித் தலைவரும் ஜோகூர் செம்ப்ரோங் எம்பியுமான ஹிஷாமுடின், ஹரப்பான் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுக்கக் கூடாது என்றார்.
சிலாங்கூரில் உள்ள தம் இல்லத்தில் தண்ணீர் இல்லை என்றவர் தெரிவித்தார்.
“அவர்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன். முன்பு சிலாங்கூரில் இலவச நீர் வழங்குவதாகக் கூறினார்கள். இன்று தாமான் TAR -இல் உள்ள என் வீட்டிலேயே தண்ணீர் இல்லை.
“தற்காப்பு அமைச்சராகிய நானே அவர்களின் வெற்று வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன்”, என்று ஹிஷாமுடின் கூறினார்.
கோலாலும்பூரிலும் சிலாங்கூரில் ஆறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமையிலிருந்து நீர் விநியோகம் நின்று போயுள்ளது. இந்நிலை வார இறுதிவரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.