ஹரப்பான் தேர்தல் அறிக்கை: நாடற்ற இந்தியர்களின் பிரச்சனை 100 நாள்களுக்குள் தீர்க்கப்படும்

பக்கத்தான் ஹரப்பான் இன்றிரவு ஷா அலாமில்  வெளியிட்ட அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் இந்நாட்டிலுள்ள நாடற்ற இந்தியர்களின் நிலமைக்கு உடனடியாகத் தீர்வு காண்பதாகும்.

“ஹரப்பான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால், நாடற்ற இந்தியர்களின் பிரச்சனை 100 நாள்களுக்குள் தீர்க்கப்படும்”, என்று ஹரப்பான் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

ஹரப்பான் தேர்தல் அறிக்கையின் ஒரு சிறப்பு பகுதியில் இந்தியர்களுக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் விபரமாக கூறப்பட்டுள்ளன. அவற்றில் அடங்கியவை:

அரசாங்கச் செலவில் ஒரு தமிழ் இடைநிலைப்பள்ளி கட்டுவதற்கு உதவுதல்;

புத்ரா ஜெயாவைக் கைப்பற்றிய 100 நாள்களுக்குள் இந்நாட்டிலுள்ள நாடற்ற இந்தியர்களின் பிரச்சனை தீர்க்கப்படும்;

பி40 என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இந்தியர்கள் மற்றும் முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வீட்டு வசதிகள் கிடைப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு தேசிய வீட்டு வசதி ஏஜென்சிக்கு உத்தரவிடப்படும்;

முன்னாள் தோட்ட நிலங்களை மேம்படுத்தும் மேம்பாட்டாளர்கள் அத்தோட்டங்களின் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மற்றவைகளுடன், இந்தியர்களுக்கு பெல்டா போன்ற ஒரு திட்டத்தை ஹரப்பான் அமைக்கும்.