14-வது பொதுத் தேர்தலுக்கான கட்சி இயந்திரத் தொடக்க குறியீடாக, அம்னோ இளைஞர் மற்றும் புத்திரி இயந்திரங்களை ஒன்று திரட்டும் தேசிய அளவிலான ஒரு மாபெரும் மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
ஜொகூர், பாகோவில் தேசிய இளைஞர் திறன் கல்வி நிறுவனத்தில் (ஐ.கே.பீ.என்) இடம்பெறவுள்ள அந்நிகழ்ச்சியை, பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் ரசாக் தொடக்கி வைப்பார் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலூடின் தெரிவித்தார்.
அம்னோ இளைஞர் மற்றும் புத்திரி பிரிவிலிருந்து, சுமார் 10,000 உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
“நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், எமது இயந்திரத்தின் கடைசி அதிகாரப்பூர்வத் தொடக்கவிழா இதுவேயாகும். எமது இயந்திரம் ஏற்கனவே தொடங்கிவிட்டது, இது அதன் கடைசி கட்டக் குறியீடாகும்,” என நேற்று கோலாலம்பூரில் செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான கைய்ரி, அனைத்து மட்டங்களிலும் உள்ள அம்னோ இளைஞர் இயந்திரங்கள் முழுமையான தயார் நிலையில் உள்ளதாகவும், இளைஞர்களின் வாக்குகளைக் கவர ஒரு சமிக்ஞைக்காக மட்டுமே அவர்கள் காத்திருப்பதாகவும் கூறினார்.
இதற்கிடையில், ஜிஇ14-ல் போட்டியிடும் இளம் வேட்பாளர்களின் எண்ணிக்கையைப் பற்றி கேட்டபோது, பிஎன் தலைமைத்துவம் அதனை முடிவு செய்யும் என்று அவர் கூறினார். ஆனால், இம்முறை அதிகமான இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பாரிசானின் பிரதான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டதும், இளைஞர்களுக்கான பிரத்தியேக தேர்தல் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
-பெர்னாமா