தேர்தல் ஆணையம் (இசி), தேர்தல் எல்லைகள் திருத்தி அமைத்த பிறகு அதற்கெதிரான ஆட்சேபனைகளைக் கேட்டு முடிக்காமல் இறுதி அறிக்கையைத் தயார் செய்தததன்வழி அரசமைப்பை மீறிவிட்டது.
இவ்வாறு கூறிய பெர்சே இடைக்காலத் தலைவர் ஷாருல் முகம்மட் சாரி, சிலாங்கூரில் இரண்டாவது சுற்று விசாரணைகளில் இதுவரை 20விழுக்காடு ஆட்சேபனைகள் மட்டுமே செவிமடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
“இன்னும் சுமார் 200 ஆட்சேபனையாளர்கள் உள்ளனர். அவர்களின் ஆட்சேபனைகளைச் செவிமடுக்கும் அரசமைப்புப்படியான உரிமை இப்போது அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அறிக்கையை இறுதிசெய்வது ஒரு “சிக்கலான” விவகாரம் என்பதால் அதில் “அவசரம்” காட்டப்படாது என்று இரண்டு நாள்களுக்குமுன் கூறிய இசி தலைவர் முகம்மட் ஹஷிம் அப்துல்லா நேற்று அதைப் பிரதமரிடம் ஒப்படைத்தது ஆச்சரியமளிக்கிறது என்று ஷாருல் குறிப்பிட்டார்.