ஆர்ஓஎஸ் அம்னோவுக்காக வேகமாக செயல்படுகிறது, ஹரப்பான் என்றால் இழுத்தடிக்கிறது: மகாதிர் கண்டனம்

அம்னோ   அதன்   கட்சி    நெருக்கடிக்குத்   தீர்வுகாண   உதவுவதில்  அதிவேகமாக     செயல்படும்    சங்கப்  பதிவகம்(ஆர்ஓஎஸ்)   எதிர்க்கட்சிகளைப்   பதிவு  செய்வதை   மட்டும்  இழுத்தடிக்கிறது    என்று   பக்கத்தான்   ஹரப்பான்  தலைவர்   டாக்டர்  மகாதிர்    முகம்மட்    சாடினார்.

ஆர்ஓஎஸ்  பாரபட்சத்துடன்   நடந்துகொள்வதற்கு   இது   தெள்ளத்தெளிவான   எடுத்துக்காட்டு   என்றவர்  முகநூல்    காணொளி  ஒன்றில்   குற்றஞ்சாட்டினார்.

“ஹரப்பான்  எட்டு  மாதங்களுக்குமுன்   அக்கூட்டணியைப்   பதிவு    செய்ய  மனு    செய்து  கொண்டது.  இதுவரை   அதற்குப்  பதில்   இல்லை.  பதில்  இல்லை  என்பது  ஒருபுறம்   இருக்கட்டும்,  மனுவைப்  பெற்றுக்கொண்டதற்கு  ஒப்புதல்கூட  இதுவரை    தெரிவிக்கப்படவில்லை.

“மனு  பரிசீலிக்கப்படுகிறதா,  இல்லையா   என்பதை    அவர்கள்     தெரிவிக்கவில்லை”,  என்ற  மகாதிர்    அதற்கு   இவ்வளவு    நீண்டகாலம்,  எட்டு  மாதங்கள்    எடுத்துக்கொள்ளக்கூடாது  என்றார்.

“அம்னோ   என்றால்,  அவர்கள்  விரைவாக    செயல்படுகிறார்கள்”,  என்றவர்  சொன்னார்.

திங்கள்கிழமை   ஆர்ஓஎஸ்  அம்னோ   அதன்   கட்சித்   தேர்தல்களை  2019வரை    தள்ளிவைக்க    அனுமதி   அளித்தது.   அவ்வாறு   செய்வது      அம்னோ  அமைப்புவிதிகளுக்கு     முரணானது      என்று   அதன்   முன்னாள்   துணைத்   தலைவர்   முகைதின்   யாசின்   சுட்டிக்காட்டியிருந்தும்    ஆர்ஓஎஸ்    அதற்கு  அனுமதி   அளித்தது.

அம்னோ   அந்த  நீட்டிப்பை   வழங்கிய   முறை   கேள்விக்குரியது     என   முன்னாள்   பிரதமர்    கூறினார்.