ரேலாவுக்கு ஒதுக்கீடு, படி அதிகரிப்பு, இன்னும் அதிகமாகத் தருவேன் என்கிறார் நஜிப்

 

ரேலாவுக்கு (மக்கள் தொண்டர் படைப் பிரிவு) ரிம20 மில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை இன்று பிரதமர் நஜிப் அறிவித்தார். இது இவ்வாண்டில் கொடுக்கப்பட்டு விட்ட ரிம100 மில்லியனுக்கு மேலாக கொடுக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு சீருடைக்காக ரிம80 மில்லியன் கொடுக்கப்பட்டது, இவ்வாண்டு ரிம100 மில்லியன் கொடுக்கப்பட்டது. அந்த ரிம180 மில்லியனுடன் இன்னொரு ரிம20 மில்லியன் கொடுத்தால் நன்றாக இருக்குமல்லவா என்று துணைப் பிரதமர் குசுகுசுவென்று என்னிடம் பேசினார் என்று நஜிப் தெரிவித்தார்.

“ஆகவே, இந்தக் கூட்டத்தில் உங்களின் விசிவாசத்தை கவனத்தில் கொண்டு நான் இன்னொரு கூடுதல் ரிம20 மில்லியனை சேர்த்துக்கொள்கிறேன்”, என்று செராடங்கில் இன்று நடைபெற்ற 46 ஆவது ரேலா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 5,000 உறுப்பினர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையே நஜிப் கூறினார்.

கடவுள் கிருபையால், ஹரிராயா கொண்டாட்டத்திற்குப் பின்னர், அரசாங்கத்திற்கு புதிய ஆளும் அதிகாரம் கிடைத்தால், நாங்கள் கூடுதல் ஒதுக்கீடு தருவோம் என்று நஜிப் மேலும் கூறினார்.

நஜிப் ரேலா உறுப்பினர்களின் படியையும் முறையே ரிம6 லிருந்து ரிம8க்கும், ரிம7.80 லிருந்து ரிம9.80 கும் கூட்டுவதாக அறிவித்தார்.