மரியா சின் தேர்தலில் போட்டியிடுவதற்கு இருக்கை வழங்க பாஸ் தயார்

 

முன்னாள் பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஸ் கட்சியின் தலைமையில் இயங்கும் காகாசான் செஜாதெராவின் கீழ் இருக்கை வழங்குவதற்கு தயாராக இருக்கிறது என்று பாஸ் மத்தியக் குழு உறுப்பினர் முகமட் சுஹாமி எம்போங் கூறுகிறார்.

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் மரியாவுக்கு இருக்கை அளிப்பதற்கு தயக்கம் காட்டுவதால், சுஹாமி இதற்கு முன்வந்தார்.

ஹரப்பான் இழுத்தடிக்கிறது. ஆனால் காகாசான் செஜாதெரா அவரை போட்டியிட அனுமதிக்கும் என்று கோலாலம்பூர், லெம்பா பந்தாயில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முகமட் சுஹாமி, காகாசான் செஜாதெராவின் கீழ் மரியா போட்டியிட விரும்பினால், அது குறித்து அவருடன் விவாதிக்க பாஸ் தயாராக இருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

நாங்கள் இதர என்ஜிஒ-க்களுக்கும் இருக்கைகள் வழங்குவோம்… பாஸ் எப்போதும் அணுகத்தக்க கட்சி என்றும் அவர் கூறினார்.

இதைப்போல், சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் காலிட் இப்ராகிமுக்கும்கூட இருக்கை வழங்கத் தயாராக இருக்கிறது என்றாரவர்.

மரியா பெர்சே தலைவர் பதவியிலிருந்து மார்ச் 6 இல் விலகிக் கொண்டார்.

சிவில் சமூகத்தை நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கும் நோக்கத்தில் அவர் தேர்தல் போட்டியிட முனைகிறார்.

அவர் எந்த ஓர் அரசியல் கட்சியிலும் சேர விரும்பவில்லை. ஆனால், ஒரு இருக்கைக்காக அவர் ஹரப்பானுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், மரியா முதலில் கட்சியில் சேர வேண்டும் என்று பிகேஆர் வலியுறுத்தி வருகிறது. அதேவேளையில், அவர் கட்சியில் சேர மறுத்து விட்டால், அவருடன் பேசுவதற்கும் தயார் என்று குறிப்பாகத் தெரிவித்துள்ளது.