1எம்டிபி தொடர்பான போலி செய்திகளைப் பரப்பினால், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

தவறான செய்திகள், குறிப்பாக 1எம்டிபி தொடர்பான அவதூறு செய்திகள் வெளியிடுகின்ற தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொலைத் தொடர்பு, பல்லூடக அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது,

மலேசியத் தொலைத் தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) ஊடாக, தனது அமைச்சு இந்த விவகாரத்தைக் கண்காணித்து வருவதாக அதன் துணை அமைச்சர் ஜய்லானி ஜொஹாரி தெரிவித்தார்.

“நாட்டில் அவதூறு மற்றும் தவறான செய்திகளின் வெளிபாட்டைச் சமாளிக்க அரசாங்கம் முன்னெடுத்த முயற்சியினால், சில பிரச்சினைகள் வெளிநாட்டு தொடர்புகளால் பெரிதாக்கப்பட்டு உள்ளன என்பதை நாம் அறிந்துள்ளோம்.

“அண்மையில், அண்டை நாட்டில் ஒரு ஆடம்பரக் கப்பல் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமரின் நம்பகத்தன்மையை அசுத்தப்படுத்தி, அழிக்கும் முயற்சியில், 1எம்டிபி விவகாரத்தை வேகப்படுத்திய பல ஆன்லைன் செய்தி இணையதளங்களை அமைச்சு கண்டறிந்துள்ளது,” என்றார் அவர்.

இன்று கெடாவில், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார்.

-பெர்னாமா