ஐஜிபி மறுதலிப்பு மனப்பான்மையால் அவதியுறுகிறார்: கிட் சியாங் சாடல்

இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்   முகம்மட்  பூஸி   ஹருன்,   மலேசியாவில்   மேற்கொள்ளப்பட்ட    விசாரணைகள்   தொழில்  அதிபர்   ஜோ  லோவுக்கும்   1எம்டிபிக்கும்   தொடர்பிருப்பதாக    காண்பிக்கவில்லை      என்று  கூறிக்கொண்டிருப்பது   அவர்  “மறுதலிப்பு  மனப்பான்மை”யில்  சிக்கித்   தவிப்பதைக்   காண்பிக்கிறது    என்று   லிம்   கிட்   சியாங்    கூறினார்.

பொதுக்  கணக்குக்குழு (பிஏசி)  மற்றும்   போலீஸ்   விசாரணைகளில்    அடிப்படையில்   அப்படிக்   கூறிக்கொண்டிருக்கும்   பூஸி,  அமெரிக்க   நீதித் துறை (டிஓஜே)   எடுத்துரைத்த    உண்மைகளையும்  மற்ற   நாடுகள்    மேற்கொண்ட   நடவடிக்கைகளையும்   வெளிநாட்டுச்   செய்திகளையும்   கண்டுகொள்ள  மறுக்கிறார்  என்றாரவர்.

1எம்டிபி   மீதான     பிஏசி     அறிக்கை   “குறையுடைய    அறிக்கை”   என்றாரவர்.   அதில்   ஜோ  லோ   பற்றி    எந்தக்   குறிப்பும்  இல்லை.   ஆனால்,  அவருக்கும்   1எம்டிபிக்குமுள்ள   தொடர்பை       “உலகமே  அறியும்”   என்றார்.

1எம்டிபி -யுடன்  தொடர்புடைய  சொத்துகளைப்   பறிமுதல்    செய்ய   டிஓஜே   நீதிமன்றத்தில்    தாக்கல்    செய்த   251-பக்க   மனுவில்   ஜோ வின்  பெயர்  நெடுகிலும்  விரவிக்கிடக்கிறது.

சிங்கப்பூரில்   அவருக்கு   உதவிய   வங்கி     அதிகாரிகள்மீதான    வழக்குகளிலும்   ஜோவின்  பெயர்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையெல்லாம்  வைத்துப்  பார்க்கையில்   பூஸி  “மறுதலிப்பு  மனப்பான்மையால்”   அவதிப்படுபவர்போல்  தோன்றுகிறது   என  லிம்  கூறினார்.