கோல்ட்பீல்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் ஈஜோக்கில், விவசாயிகளின் பிள்ளைகளுக்குத் தங்குமிடம் கட்டுமானப் பிரச்சனையில், சிலாங்கூர் அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளது எனும் பி.புனிதனின் அறிக்கையை, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி கணபதிராவ் சாடினார்.
பள்ளிக்கூடத்திலிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணம், பி.என். அரசாங்கத்தின் அலட்சியப்போக்கே தவிர; மாநில அரசாங்கம் மற்றும் வேறு எந்த அரசு சாரா அமைப்புகளும் அல்ல என்று கணபதிராவ் தெரிவித்தார்.
“ஏற்கனவே நமக்கு தெரிந்தது போல, 2012-ஆம் ஆண்டில், 18 வகுப்பறைகள், நூலகம், அறிவியல் ஆய்வுக்கூடங்கள், கணினி கூடங்கள், ஆசிரியர் அறை மற்றும் 4 ஏக்கர் நிலத்தில், 800 பேர் அமரக்கூடிய, ரிம4 மில்லியன் மதிப்பிலான மண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பள்ளியைக் கட்டித்தருவதாக மாநில அரசாங்கம் உறுதியளித்தது.
“இருப்பினும், கல்வி அமைச்சு மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சுடன் (ஜே.கே.ஆர்) பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டதால், மாநில அரசாங்கத்தால் அதனைச் செயல்படுத்த முடியாமல் போனது. எனவே, அப்பள்ளியை அமைக்க, அந்த நான்கு ஏக்கர் நிலத்தையும் ரிம 4 மில்லியனையும் மாநில அரசு ஜே.கே.ஆர்.-இடம் கொடுத்தது. இப்போது மஇகா பிரச்சாரம் செய்துவரும் பிரச்சனைகள், அங்கிருந்துதான் எழுந்தது,” என சிலாங்கூர் மாநில அரசாங்கத் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
மாநில அரசின் கல்வி ஆட்சிக்குழு உறுப்பினர், நிக் நஸ்மி நிக் அஹ்மட்டின் சிறப்பு அதிகாரி, ராஜாவும் உடன் இருந்தார்.
அங்குப் பெரியப் பள்ளி தேவையில்லை என்றது கல்வி அமைச்சு
அச்சுற்று வட்டாரத்தில், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருப்பதால், 18 வகுப்பறைகள் தேவையில்லை என அத்திட்டத்தை நிராகரித்தது கல்வி அமைச்சுதான் என்றார் அவர்.
“6 வகுப்பறைகள் போதுமானது என்று ஆலோசனைக் கூறியது கல்வி அமைச்சுதான், மாநில அரசாங்கம் அல்ல. மேலும், RM4 மில்லியனில், 6 வகுப்பறைகள், ஆசிரியர் அறை, நூலகம், சிற்றுண்டிச் சாலை போன்றவற்றை மட்டுமே கட்ட முடியுமென ஜே.கே.ஆர். வலியுறுத்தியது,” என்றார் அவர். அனைத்து தெண்டர் மற்றும் கட்டுமான செயல்முறைகளையும் ஜே.கே.ஆர்.தான் மேற்கொண்டது என அவர் மேலும் சொன்னார்.
“எனவே, யாரை இங்கே குற்றம் சாட்டுவது? மாநில அரசையா அல்லது பி.என். அரசாங்கத்தையா?” எனக் கேட்டதோடு; பள்ளிக் கட்டுமானத்திற்குக் கொடுத்த நான்கு ஏக்கர் நிலத்தில், 1.4 ஏக்கர் மாநில அரசுக்குச் சொந்தமானது என்றும் கணபதிராவ் தெரிவித்தார்.
“சரியாகச் சொல்ல வேண்டுமானால், 2.5 ஏக்கர் நிலம் மட்டுமே கே.எல். கெப்போங் நிறுவனம் வழங்கியது, மீதமுள்ள நிலம் மாநில அரசு வழங்கியது,” என்று அவர் கூறினார்.
பக்காத்தான் ராக்யாட் அரசாங்கத்தின் வாக்குறுதி என்னவானது?
முன்னதாக, 2012-ல், பக்காத்தான் ராக்யாட் அரசாங்கம் வாக்குறுதியளித்த, கோல்ட்பீல்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் விவசாயிகளின் பிள்ளைகளுக்கான தங்குமிடம் கட்டுவதற்கான 11.68 ஏக்கர் நிலம் மற்றும் ரிம 11 மில்லியன் குறித்து, மாநில முதல்வர், அஸ்மின் அலி விவரிக்க வேண்டுமென பி.புனிதன் சவால் விடுத்திருந்தார்.
பக்காத்தான் அரசாங்கத்தில், அஸ்மின் அலியின் நிர்வாகத்தில் நடந்த, இன்னுமொரு பொய்யான உறுதிமொழி இந்த மர்மமான முறையில் காணாமல் போன நிலமும் நிதியும் என புனிதன் கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தைத் தெளிவுபடுத்த, அஸ்மின், கணபதிராவ் மற்றும் ஶ்ரீ அண்டாலஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஆகியோருக்கு, புனிதன் 3 நாட்கள் அவகாசம் அளித்தார்.
கோல்ட்பீல்ட்ஸ் விவசாயிகள் குழுந்தைகளின் தங்குமிடம் பற்றி கேட்டபோது, அதன் கட்டுமானம் தற்போது ஷா ஆலாம், செக்ஷன் 7, மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி அருகில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கணபதிராவ் விளக்கினார்.
“ஷா ஆலாம் இந்த மாணவர் தங்கும் விடுதிக்கு ஏற்ற இடமெனக் கண்டறியப்பட்டதால், அத்திட்டம் அங்கு அமலாக்கப்படும். கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி இன்னும் மாநில அரசாங்கத்திடம் உள்ளது. புனிதன் குறிப்பிட்ட 7.68 ஏக்கர் நிலம் அரசாங்கத்தின் கைகளில் உள்ளது. ஈஜோக்கில் இருக்கும் அந்நிலத்தில், இந்தியர்களுக்கு நன்மை பயக்கும் வேறு சில திட்டங்களை நாங்கள் கொண்டுள்ளோம்,” என்றார் அவர்.
சுயலாபத்திற்காக, பள்ளிப் பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம்
தங்கள் சுயலாபத்திற்காக, இந்தப் பள்ளி பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம் என, ம.இ.கா. தலைவர்களைக் கணபதிராவ் கேட்டுக்கொண்டார்.
“ஈஜோக்கில் அவர் (புனிதன்) போட்டியிட விரும்பினால், அது அவரது உரிமை. ஆனால், இந்தப் பள்ளி பிரச்சனையை அரசியலாக்கக் கூடாது, அவரின் சுயலாபத்திற்காக.”
இதற்கிடையில், மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டில் அக்கறை கொண்டிருக்கும், ம.இ.கா. தலைவர்களின் மனோபாவம் மகிழ்ச்சி தருவதாகவும் கணபதிராவ் தெரிவித்தார்.
தமிழ் இடைநிலைப் பள்ளி அமைக்க, சுபாங்கில் 8 ஏக்கர் நிலம்
“பொதுத் தேர்தல் நெருங்கிவிட்டது. ஆக, ம.இ.கா.-வுக்குத் தமிழ்ப்பள்ளிகள் மீது காதல் வந்துவிட்டது. நான் புனிதனுக்கு அல்லது ம.இ.கா.-வில் இருக்கும் தலைவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு நான் சவால் விடுகிறேன். நாங்கள் (ஹராப்பான்), சிலாங்கூரில் ஒரு தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க, சுபாங்கில் 8 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளோம். பள்ளி கட்டுவதற்கான அனுமதியைக் கல்வி அமைச்சிடம் இருந்தும், நிதியைப் பிரதமரிடம் இருந்தும் ம.இ.கா.-வால் பெற்றுத்தர முடியுமா?” என கணபதிராவ் சவால் விடுத்தார்.
பொது மக்களின் குழப்பங்களைப் புனிதன் தீர்த்து வைப்பாரா?
இதற்கிடையில், மலேசியத் தமிழ்ப் பள்ளிகள் பற்றிய சில கேள்விகளுக்குப் பதில் அளிக்குமாறு, ராஜா புனிதனுக்குச் சவால் விடுத்துள்ளார்.
“அவர் எங்களுக்கு 3 நாட்கள் அவகாசம் கொடுத்தார், நாங்கள் பதில் கொடுத்துவிட்டோம். இப்போது, எங்களின் நான்கு கேள்விகளுக்குப் பதிலளிக்க, அவருக்கு நாங்கள் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
- செரெண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானப் பணிகளின் நிலை என்ன?
- ‘திருடப்பட்ட’ எஃபிங்ஹெம் பள்ளிக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தைத் திருப்பிக் கொடுக்க, ம.இ.கா.-வுக்குத் தைரியம் உள்ளதா?
- சுங்கை ரம்பாய் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம் என்னவானது?
- 39 தமிழ்ப்பள்ளிகள் கட்டுமானம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை வழங்குவதில், தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாக, ம.இ.கா. உயர்மட்ட தலைவர் மீதான குற்றச்சாட்டுக் குறித்து, ம.இ.கா.-வின் விளக்கம் என்ன?
“இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்து, பொது மக்களின் குழப்பங்களைப் புனிதன் தீர்த்துவைப்பார் என்று நாங்கள் பெரிதும் நம்புகிறோம்,” என்றார் ராஜா.
-பெரித்தா டெய்லி