பக்கத்தான் ஹரப்பான் வாக்குறுதி கொடுத்திருப்பதுபோல் ஆட்சிக்கு வந்ததும் டோல் கட்டணத்தையும் ஜிஎஸ்டி-யையும் எடுத்து விட்டால் தேசிய கடன் கிட்டத்தட்ட ரிம1ட்ரில்லியனாக அதிகரிக்கும என இன்று காலை பெர்லிஸில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெரிவித்தார்.
ஜிஎஸ்டியையும் நெடுஞ்சாலை டோல் கட்டணத்தையும் எடுத்து விடுவதால் ஏற்படும் வருமான இழப்பை நடப்பு தேசிய கடனுடன் சேர்த்துக் கணக்கிட்டால் அத்தொகை வரும் என்றாரவர்.
“இந்தக் கடன்கள் வழிவழியே வந்து சேர்ந்துள்ளவை. இவற்றைச் செலுத்தப் போகின்றவர்கள் நீங்கள்தான்”, என யுனிவர்சிடி மலேசியா பெர்லிஸில் மாணவர்களிடையே பேசியபோது நஜிப் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் இர்வான் செரிகார் அப்துல்லா தேசிய உயர்க் கல்வி நிதிக் கழகம் அளித்துள்ள கடன்கள், ஜிஎஸ்டி, டோல் கட்டணம் ஆகியவற்றை இரத்துச் செய்து விட்டால் மலேசியா ரிம416. 6பில்லியன் வருமானத்தை இழக்கும் என்று கூறியிருந்தது குறித்துக் கருத்துரைத்தபோது நஜிப் அவ்வாறு கூறினார்.
கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வழி கிடைத்த வருமானம் சுமார் ரிம46பில்லியன். இந்த வருமானமின்றி நாட்டை மேம்படுத்தப்போவதாக எதிரணி கூறிகொள்வதைக் கேட்கும்போது சிரிப்புத்தான் வருகிறது என்றவர் கிண்டலடித்தார்.