பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவரது பேருக்கும் நாட்டின் பேருக்கும் ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தாக வேண்டும், வேறுவழியில்லை என்கிறார் லிம் கிட் சியாங்.
“நஜிப் இனியும் கண்ணிருந்து பாராமலும் காதிருந்து கேளாமலும் வாயிருந்து பேசாமலும் இருந்துவிட முடியாது”, என டிஏபி நாடாளுமன்றத் தலைவர் இன்று பிற்பகல் விடுத்த அறிக்கை ஒன்றில் கூறினார்.
அனைத்துலக ஊடக நிறுவனங்கள் இரண்டு, பிரதமரைத் “திருடர்” என்று வருணித்திருப்பதைத்தான் லிம் குறிப்பிட்டார்.
“நாட்டின் 61 ஆண்டுக்கால வரலாற்றில் பிரதமர் ஒருவர் பகிரங்கமாக ‘திருடர்’ என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.
“அனைத்துல ஊடக நிறுவனங்களால் இரண்டு நாளில் இரண்டு தடவை”, என்றாரவர்.
மார்ச் 8இல் எக்கோனமிஸ்ட் வார இதழ் ஒரு கட்டுரைக்கு “திருடர், பிடியுங்கள்! மலேசியப் பிரதமர் தேர்தலையே திருடப் பார்க்கிறார்” என்று தலைப்பிட்டிருந்தது.
அடுத்த நாள், அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான MSNBC இன் செய்திப் படைப்பாளர் ரேச்சல் மட்டாவ் 1எம்டிபிமீது அமெரிக்க நீதித்துறை தொடுத்துள்ள வழக்குப் பற்றிக் குறிப்பிட்டபோது நஜிப்பை ஒரு “திருடர்” என்று குறிப்பிட்டார்.
நஜிப் ஊடக நிறுவனங்களுக்கெதிராக வழக்கு தொடுத்து தம் பேருக்கும் புகழுக்கும் ஏற்பட்ட களங்கத்தைப் போக்கிக் கொள்வாரா என்று லிம் வினவினார்.
அவருக்காக இல்லாவிட்டாலும், மலேசியாவுக்காகவும் அதன் 30 மில்லியன் மக்களுக்காகவும் அவர் அதைச் செய்திடல் வேண்டும் என்று லிம் வலியுறுத்தினார்.