கொஞ்சம் உறுப்பினர்களைக் கொண்ட பெர்சத்து அனுபவமற்ற தலைவர்களால், அதில் 92 வயதான ஒருவரும் உட்பட, வழிநடத்தப்படுகிறது என்று பெர்சத்துவின் தலைவர் மகாதிர் முகமட் தமது கட்சியை ஏளனமாக வர்ணித்தார்.
ஆனாலும்கூட, இக்கட்சியைக் கண்டு பிரதமர் நஜிப் பயப்படுகிறார். அக்கட்சி அதன் பதிவு மனறங்கள் பதிவகத்தால் இரத்து செய்யப்படும் அபாயத்தில் இருக்கிறது என்று மகாதிர் கூறினார்.
எங்கள் கட்சி புதியது, சிறியது, கொஞ்சம் உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். அதை அனுபவமற்ற ஒரு 92 வயதானவர் வழிநடத்துகிறார் என்று கூறிய மகாதிர், அக்கட்சியை நஜிப் முடக்க விரும்புகிறார். எங்களிடம் குறைகளைக் காண அவர்கள் விரும்புகிறார்கள் என்று நாடாளுமன்ற எதிரணித் தலைவரின் அலுவலகத்தில் பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்திற்கு தலைமை ஏற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
எனினும், பெர்சத்துவின் பதிவு இரத்து செய்யப்பட்டால், 14 ஆவது பொதுத் தேர்தலுக்கான அதன் திட்டங்கள் என்ன என்பதை அவர் கூறவில்லை.
அக்கட்டத்தில் பெர்சத்து அதன் பங்காளிகளின் சின்னத்தின் கீழ் போட்டியிடுமா என்ற கேள்விக்கு, டிஎபியை தேர்வு செய்யலாம், ஏன் டிஎப்யின் தலைவரும்கூட ஆகலாம் என்று இதர ஹரப்பான் தலைவர்களின் சிரிப்பொலிக்கிடையில் அவர் பதில் அளித்தார்.
டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கைப் பார்த்து, என்ன ஏற்றுக்கொள்கிறீரா என்று மகாதிர் கேட்டார்.
அதற்கு, குவான் எங் அவரது தோள்களை உயர்த்திக் குலுக்கினார். அதை தாம் “ஆம்” என்று எடுத்துக்கொள்வதாக மகாதிர் கூறினார்.