ஜிஇ14 – பி.எஸ்.எம். ஏன் அதிக இடங்களில் போட்டியிடுகிறது?

வரவிருக்கும் 14-வது பொதுத் தேர்தலில், ‘தேர்தல் வரைபடத்தில் ஓர் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள’ இன்னும் கூடுதலான தொகுதிகளில் போட்டியிட மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.)  திட்டமிட்டுள்ளது

பக்காத்தான் ஹராப்பான் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்ததால், பி.எஸ்.எம். இந்த முடிவுக்கு நிர்பந்திக்கப்பட்டது என அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினரான டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ் தெரிவித்தார்.

தவிர, இந்த இடங்களில் “நாங்கள் வேலை செய்துள்ளோம்”, என்று டாக்டர் ஜெயக்குமார் மேலும் கூறினார்.

சுங்கை சிப்புட், பத்து காஜா, கேமரன் மலை, சுபாங் மற்றும் உலு லாங்காட் நாடாளுமன்றத் தொகுதிகளிலும், கோத்தா லாமா (கிளாந்தான்), ஜெலாய் (பஹாங்), செமிஞ்சே, கோத்தா டாமான்சாரா, கிள்ளான் துறைமுகம் (சிலாங்கூர்), புந்தோங், ஜெலாப்பாங், மெங்கிழம்பு, துரோனோ, மாலிம் நாவார் (பேராக்) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்த பி.எஸ்.எம். திட்டமிட்டுள்ளது.

“ஹராப்பான் அவர்களின் இருக்கை பகிர்வு பேச்சுவார்த்தைகளில் எங்களை இணைத்திருந்தால், நாங்கள் சமரசமாக இடங்களின் எண்ணிக்கையைக் குறைத்திருப்போம்,” என்று அவர் கூறினார்.

“இருப்பினும், பேச்சுவார்த்தைக்கான பாதை இன்னும் திறந்தே இருக்கிறது, இதனை நாங்கள் ஹராப்பானுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம்,” என்றார் அவர்.

14-வது பொதுத் தேர்தல் மிகவும் முக்கியமானது, காரணம் ஹராப்பான் தனது நிலையைத் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போகும் ஆபத்து இருக்கிறது, பாரிசான் நேஷனல் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு திரும்பும் வாய்ப்புள்ளது, மலாய்க்காரர் அல்லாத எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் வாக்குகள் வழி,” என்றார் சுங்கை சிப்புட் எம்.பி.-யுமான டாக்டர் ஜெயகுமார்.

“இது நாட்டிற்கு பேரழிவுதான்.”

63 வயதான டாக்டர் கூறுகையில், “மாற்றத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஹராப்பான் ஆதரவாளர்களைத் தேர்தலின் வழி துன்புறுத்தாமல், அந்நியப்படுத்தாமல் பாதுகாக்கும் ஒரு கடினமான பணி பி.எஸ்.எம்.-க்கு இருக்கிறது என்றார்.

“பி.எஸ்.எம்-ஐ தேர்தல் தளத்திலிருந்து ஹராப்பான் விலக்கி வைத்துள்ளது. நாங்கள் நிற்கும் எல்லா இடங்களிலும் மும்முனை போட்டிதான், பிஎன் மற்றும் ஹராப்பானுடன்.

“ஆனால், மலேசிய அரசியல் செயல்முறையில் ஒரு தனித்துவமான பங்களிப்பு எங்களுக்கு உண்டு என நாங்கள் நம்புகிறோம்.

“21-ம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் இன்னமும் ஒரு பிரச்சினையாக உள்ளது என்று நினைக்கும் ஒரே கட்சி நாங்கள்தான். ஆக, எங்கள் கொள்கைகளை விட்டுவிட்டு, சாதாரண மக்களைப் போல் இருக்க முடியாது.”

ஒருவேளை மும்முனைப் போட்டி ஏற்பட்டால், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் பற்றி கேட்டபோது, “மிகவும் கடுமையானது. வெற்றி வாய்ப்பு விளிம்பிலேயே உள்ளது, மெல்லியதாக – 2700,” என்றார் ஜெயக்குமார்.

“எனக்குச் சரியாகத் தெரியவில்லை, நான் அரசியலில் முற்றிலும் ஒரு புதிய வகையை பிரதிநிதிக்கிறேன் என்பதை, சுங்கை சிப்புட் வாக்காளர்கள் கணிசமான எண்ணிக்கையில் உணர்ந்துள்ளனர், என்னை ஆதரிக்கின்றனர். அரசியல் தலைவர்கள் நினைப்பதைவிட, சாதாரண வாக்காளர்கள் சிறப்பாக சிந்திக்கிறார்கள் என்று இதற்கு அர்த்தம்,” என்று அவர் கூறினார்.

சமுதாயம் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார சவால்களைப் பற்றி பி.எஸ்.எம். அக்கறை கொண்டுள்ளது, குறிப்பாக இனவாதப் பொருளாதார இடைவெளிகள்.

“இந்த சவால்களை எதிர்கொள்ள, சமூக-பொருளாதார இடைவெளிகளை உருவாக்க உலகப் பொருளாதார அமைப்பு எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பதை நாம் உணர்த்த வேண்டும். உலகப் பொருளாதாரத்தில் மூன்றாம் உலக நாடுகளின் ஈடுபாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு புதிய தலைமுறை வர்த்தக ஒப்பந்தங்கள் நமக்கு தேவை,” என்று டாக்டர் ஜெயக்குமார் கூறினார்.

“அடிப்படைத் தேவைகளை வணிக மயமாக்குவதை நிறுத்த வேண்டும். அது செலவுகளை அதிகரிக்கிறது. அடிப்படைத் தேவைகளை மலிவு விலையில் வழங்க வேண்டும், அரசு அதற்கு மானியம் கொடுக்கவேண்டி இருந்தாலும்.

“தொழிலாளர்கள் தங்களது உழைப்பின் மதிப்பைக் காட்டிலும் குறைவான ஊதியங்களில் பணியாற்றுகின்றனர். எனவே, இது ஒரு ‘சமூக ஒப்பந்தம்’ அல்ல, ‘பிச்சைக்காரர்களுக்குக் கொடுக்கும் தர்மம்’.

“மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப நாங்கள் விரும்புகிறோம். மென்மையான திறமைகளைக் கொண்டு,  சமூகத்தில் ‘கதாநாயகர்களை’ உருவாக்க முடியும்,” என்று டாக்டர் ஜெயக்குமார் கூறினார்.

அதோடுமட்டுமின்றி, நாட்டு வளங்கள் சரிசமமாக பகிர்ந்தளிக்கப்படுதல் மற்றும் இன நல்லிணக்கம் ஆகியவை சிறப்பான மலேசியாவை உருவாக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.