புத்ரா ஜெயாவைக் கைப்பற்றிய பின்னர் டிஎபி பிரதிநிதிகள் சொத்துக்களை அறிவிப்பார்கள்

 

மத்திய அரசை அமைத்து அதன் அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட பின்னர் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய சொத்துக்களை அறிவிப்பார்கள் என்று அக்கட்சியின் பிரச்சாரப் பிரிவின் தலைவர் டோனி புவா கூறினார்.

“மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாகவும், மந்திரிகளாகவும் நியமிக்கப்பட்ட பின்னர் நாங்கள் எங்களுடைய சொத்துக்களை அறிவிப்போம். இது டிஎபியின் நிலைப்பாடு என்று நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் டோனி கூறினார்.

நேற்று அரசுசார்பற்ற அமைப்பான இன்வோக்கின் மூலம் பக்கத்தான் ஹரப்பானின் தேர்தல் வேட்பாளர்களாகக் கருத்தப்படும் 36 பேர் அவர்களுடைய சொத்துக்களை அறிவித்தது பற்றி கேட்ட போது பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினரான டோனி இவ்வாறு கூறினார்.

சொத்துக்களை அறிவித்தவர்களில் அமனா வியூக இயக்குனர் டிசுல்கிப்ளி அஹமட், பினாங்கு சட்டமன்ற முன்னாள் தலைவர் அப்துல் ஹாலிம் ஹுஸ்ஸெய்ன் மற்றும் பிகேஆர் தொடர்புகள் இயக்குனர் ஃபாமி பாட்ஸில் ஆகியோரும் அடங்குவர்.

இதுவரையில் சொத்துக்களை அறிவித்த வேட்பாளர்களாக கருதப்படும் 103 பேரில் அவர்களும் அடங்குவர்.

இன்வோக்கின் தகவல்படி, சொத்து அறிவிப்பு விபரங்களை அதன் வலைத்தளத்தின் வழி தெரிந்துகொள்ளலாம்.