தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் கூடுதல் பத்திரிகைச் சுதந்திரம் வழங்கப்படும் என்றும் பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் நீக்கப்படும் என்று கூறும் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சாடினார்.
முன்னாள் பிரதமர் அவரது ஆட்சிக்காலத்திலேயே அவற்றைச் செய்திருக்கலாமே என்றாரவர்.
“மகாதிர் எந்தெந்த சட்டங்களை அகற்ற நினைக்கிறார்? 22 ஆண்டுக்காலம் பிரதமராக இருந்தபோது அவருக்கு அதிகாரம் இருந்ததே, அப்போது ஏன் இந்த மாற்றங்களைக் கொண்டுவரவில்லை?”, என சாலே அவரது வலைப்பதிவில் வினவினார்.
ஜனநாயகத்தை வளர்ப்பதில் மகாதிர் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறாரா எனவும் அவர் வினவினார். அவர் ஆட்சியில் இருந்தபோது தடுப்புக் காவல் சட்டமான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட(ஐஎஸ்ஏ)த்தைத் தற்காத்துப் பேசினார். இப்போது ஜனநாயகத்தை மிரட்டும் ஒரு கொடிய சட்டம் என்கிறார்.
மகாதிர் பல்டி அடிப்பது ஏனென்று சாலே வினவினார்.
சிறிது காலத்துக்கு முன்பு மகாதிர் மலேசியாவுக்கு மேலைநாடுகளில் பின்பற்றப்படும் முழு ஜனநாயகம் ஒத்துவராது, வழிகாட்டி ஜனநாயகம்தான் உகந்தது என்றார்.
“கட்டுப்பாடற்ற பேச்சுரிமை இன, சமயச் சச்சரவுகளுக்கு வழிகோலும் எனவே மேலைநாட்டு ஜனநாயகமும் பேச்சுரிமையும் மலேசியாவுக்கு ஏற்புடையதல்ல என்று மகாதிர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
“இப்போது அதிலும் பல்டி அடித்து விட்டாரா?”, என்று சாலே கூறினார்.