பொக்கோக் சேனா எம்பி, மாபுஸ் ஒமார் இன்று பாஸிலிருந்து பிரிந்துவந்த கட்சியான அமனாவில் சேர்வதாக அறிவித்தார்.
34ஆண்டுகளாக பாஸ் உறுப்பினராக இருந்தவர் மாபுஸ். ஒரு நேரத்தில் அக்கட்சியின் உதவித் தலைவராகவும் இருந்தார். ஆனால், 2015-இல் பழமைவாதிகள் அக்கட்சியைக் கைப்பற்றியதை அடுத்து அவர் ஓரங்கட்டப்பட்டார்.
புதிய தலைமைத்துவம் பாஸின் மூத்த தலைவர்கள் பலரை வெளியேற்றியது. அப்படி வெளியேற்றப்பட்டவர்களால் உருவாக்கப்பட்டதுதான் அமனா.
ஆனால், மாபுஸ் வெளியேறவில்லை. கட்சியில் இருந்துகொண்டே எதிர்ப்புக்குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
முடிவில் கடந்த டிசம்பரில் அவரும் கட்சியிலிருந்து விலகினார். விலகிய நாளிலிருந்து சுயேச்சை எம்பி-ஆக செயல்பட்டு வந்தார்.
“நான் சுயேச்சை எம்பி-ஆக இருந்த காலம் முடிந்து விட்டது. அமனாவில் இணைந்து பக்கத்தான் ஹரப்பான் நண்பர்களுடன் சேர்ந்து மாற்றங்களைக் கொண்டு வருவேன்”, என்றாரவர்.
இன்று நாடாளுமன்றத்தில் ஹரப்பான் எம்பிகள் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் மாபுஸ் இதை அறிவித்தார்.