பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உள்ளூரில் தம்மை விமர்சிக்கும் விமர்சகர்களையும் ஊடகங்களையும் எதிர்த்து வழக்கு தொடுக்கத் தயங்குவதில்லை ஆனால், வெளிநாடுகள் என்று வரும்போது அந்தத் துணிச்சலைக் காண முடியவில்லையே.
இன்று மக்களவையில் அரச உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டபோது இவ்வாறு கூறிய தியோ நை ச்சிங்(டிஏபி- கூலாய்), ஒருவேளை வெளிநாட்டு விமர்சகர்கள் என்னும்போது நஜிப்புக்குத் தாராள மனப்பான்மை வந்து விடுகிறதோ என்று வினவினார்.
“தாராள மனப்பான்மை கொண்ட தலைவர் என்பதால் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்கிறாரா? வெளிநாட்டு ஊடகங்கள்மீது நடவடிக்கை எடுக்கும் மனம் இல்லாதவரா?
“பிஜே உத்தாரா(டோனி புவா), பாண்டான்(ரபிஸி ரம்லி), மலேசியாகினி, ஹராக்கா, ஏன் முன்னாள் மசீச தலைவர் லிங் லியோங் சிக்மீதுகூட வழக்கு தொடுத்தாரே”, என்று தியோ குறிப்பிட்டார்.
தியோ இந்தோனேசியாவின் டெம்போ பத்திரிகையின் அட்டைப்படத்தைக் கையில் வைத்திருந்தார். அதில், தொழிலதிபர் ஜோ லோ ஆடம்பர உல்லாசப் படகான ஈக்குவேனிமிடி பயணம் செய்வதுபோன்ற கேலிச் சித்திரம் இடம்பெற்றிருந்தது. “1எம்டிபி ஊழல் படகு” என்று அதற்குத் தலைப்பிடப்பட்டிருந்தது.
“பிஜே உத்தாரா, பாண்டான் ஆகியோருக்கு எதிராகவும் மலேசியாகினிக்கும் மற்றவர்களுக்கும் எதிராகவும் வழக்கு தொடுக்கும் அவர்(நஜிப்) வால் ஸ்திரிட் ஜர்னல், டெம்போ, தி எக்கோனோமிஸ்ட், எம்எஸ்என்பிசி ஆகியவற்றுக்கு எதிராக வழக்கு தொடுக்கத் துணிவதில்லையே, அது ஏன் என்று கேட்கிறேன்”, என்றாரவர். தியோ குறிப்பிட்ட இந்த ஊடகங்கள் எல்லாம் அண்மையில் நஜிப்பைக் குறைகூறி செய்திகள் வெளியிட்டிருந்தவை.
மடியில் கனமிருப்பதால் வழியில் பயமிருக்கத்தான் செய்யும் அம்மணி!