எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், ஆளுங்கட்சியைத் தூக்கியெறியும் நோக்கத்துடன், பாரிசான் நேசனல் கோட்டையாக விளங்கும் சில இடங்களில், பக்காத்தான் ஹராப்பான் தனது முக்கியத் தலைவர்களைக் களமிறக்கவுள்ளதாக ஊகங்கள் வலுக்கின்றன.
இதில் குறிப்பிடத்தக்கவர் பெர்சத்து தலைவர், முஹிட்டின் யாசின், தனது நாடாளுமன்ற தொகுதியான பாகோவைவிட்டு, இம்முறை மூவாரில் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.
“இன்னும் சிறிது நாள்களில், இந்த முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
“எந்தத் தொகுதியில் போட்டியிடவும் நான் தயாராக இருக்கிறேன். நான் பழைய ஆள், எங்கு போட்டியிட்டாலும் எனக்குப் பிரச்சனை இல்லை.
“பாகோ எனது பழைய தொகுதி, நிறைய பேர் என்னைப் பாகோவில் நிற்குமாறு கேட்டுக்கொண்டனர், நாம் அதனையும் பரிசீலிப்போம்,” என இன்று பாகோவில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் முஹிட்டின் கூறினார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றியடைவதுதான் முக்கியம் என்றும் அவர் மேலும் கூறினார்.
ஜிஇ13-ல், அப்போதைய துணைப் பிரதமரும் அம்னோவின் துணைத் தலைவருமான முஹிட்டின், பாகோ நாடாளுமன்றத் தொகுதியை 12,842 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிகொண்டார்.