பாக்கத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கைக்கு இந்தியத் தலைவர்கள் வரவேற்பு    

14-3-2018 இல், கோலாலம்பூர்  செந்துல் கறி உணவகத்தில் பாக்கத்தான்  ஹராப்பான் இந்தியத் தலைவர்கள் பாக்கத்தான் ஹராப்பானின் இந்தியர்களுக்கான சிறப்பு கொள்கை அறிக்கையை விவரித்தனர்..

 

அதில் கெஅடிலான், ஜ.செ.க ஆகியவற்றின் இந்திய நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களும் ஹிண்ட்ராப்பை பிரதிநிதித்து அதன் தலைவர் வேதமூர்த்தியும், மீராவை பிரதிநிதித்து .ராஜரத்தினமும் கலந்துகொண்டனர்.

 

பத்திரிக்கையாளர்களையும்  அழைக்கப்பட்ட கட்சி தலைவர்களையும் உறுப்பினர்களையும்  வரவேற்றுப் பேசிய டாக்டர் சேவியர் ஜெயக்குமார், நாட்டு மக்களின் நலனுக்காக  பாக்கத்தான் ஹராப்பான் 60 முக்கிய வாக்குறுதிகளையும்,   இந்தியர்கள், மகளிர், இளைஞர், மற்றும் முதியோர் ஆகியோரின்  நலனில் சிறப்பு கவனம் செலுத்தும் வண்ணம் 5 சிறப்புப் பிரிவுகளைப் பாக்கத்தான் ஹராப்பானின் இந்த 14வது பொதுத் தேர்தல் அறிக்கை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்,

 

குறிப்பாக, இந்தியர் பொருளாதார மேம்பாட்டுக்கு ரிம400 கோடி சிறப்பு நிதி, மற்றும் 100 நாட்களில் இந்தியர்களின் அடையாளப் பத்திர விவகாரத்திற்குத் தீர்வு காண்பது பற்றியும் சேவியர் விளக்கமளித்தார்.

 

அடுத்து, ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் குழந்தைகள் மதம் மாற்றுதல் குறித்தும், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் அரசாங்க தமிழ் இடைநிலைப்பள்ளி குறித்தும் பேசினார்கள்.

 

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு இந்த வாக்குறுதிகள்  அனைத்தும் சாத்தியமானவை. இது குறித்து பல விவாதங்கள், ஆய்வுகள், மற்றும் பட்டறைகள் நடத்தி, சமுதாயத்தின் பலதரப்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட சந்திப்புகளின் வழி தீட்டப்பட்ட கொள்கைகள் ஆகும் என்றார்.

 

இதனை வரவேற்றுப் பேசிய ஹிண்ட்ராப் வேதமூர்த்தி, இது ஒரு நல்ல தொடக்கம். இதில் கண்டுள்ள பல அம்சங்கள் நாட்டுக்கும் இந்தியர்களுக்கும் மிகுந்த நன்மையளிக்க வல்லது. கடந்த 60 ஆண்டுகளில், பாரிசான் மறந்துவிட்ட ஒரு சமுதாயம் குறித்துப் பாக்கத்தான் ஹராப்பான் விரிவான ஒரு தேர்தல் கொள்கை அறிக்கை சமர்ப்பித்துள்ளதை அவர் வரவேற்றார். இந்தியர்கள் தங்களுக்கு சிறந்ததை தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும் என்றார்,

 

மீரா தலைவர் ராஜரத்தினம் இதில் காணப்படும் உறுதிமொழிகளை மஇகாவினர் உதட்டளவில்கூட இன்றைய பாரிசான் அரசாங்கத்திடம் முனுமுனுக்க மாட்டார்கள். அவர்கள் இது போன்றவற்றை முன்வைத்ததில்லை. ஆக, நாம் நல்லபடியாக இருக்க வேண்டும், நம் பிள்ளைகளின் எதிர்காலம் இந்நாட்டில் சிறக்க வேண்டும் என்றால் ஒட்டுமொத்த இந்தியர்களும் அவர்களுடைய வாக்குகளை பாக்கத்தான் ஹராப்பானுக்கு வழங்க வேண்டும் என்றார்.